Wednesday, June 4, 2014

தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.  - 201

தி.பொ.ச. உரை: தீவினை ஆகிய அழிவினைச் செய்ய நல்லவர்களே அஞ்சுவர்; தீயவர்கள் அஞ்சுவதில்லை. ( எனவே தீயவர்களிடம் இருந்து விலகியே இருங்கள் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். இங்கு செருத்தல் = அழித்தல். செருத்தல் வினையின் பயனாகிய அழிவே செருக்கானது. அகராதி காண்க. என்னும் என்பதற்குப் பதிலாக ஈனும் என்றும் வரும். )
===========================================================

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.  - 202

தி.பொ.ச. உரை: தீய செயல்கள் எப்போதும் தீமையே தருவதால் அவற்றைத் தீயைக் காட்டிலும் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்வதற்கு அஞ்சிடவேண்டும். ( ஐந்து பூதங்களுள் ஒன்றான தீயினை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம்; அழிவிற்கும் பயன்படுத்தலாம். அதாவது தீயினால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. ஆனால் தீய செயல்களால் எப்போதும் தீமையே விளைவதால் அவற்றைத் தீயைக் காட்டிலும் கொடியவை என்கிறார் வள்ளுவர். )
====================================================

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203

தி.பொ.ச. உரை: தம்மிடம் எப்போதும் வெறுப்புடன் நடந்து கொள்பவர்களிடத்தில் கூட தீமை செய்யாமலிருப்பதே தலைசிறந்த அறிவுடையோரின் பண்பாகும். ( இதற்கான காரணத்தினை அடுத்த குறளில் கூறுகிறார் வள்ளுவர். )
==========================================================

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.    -  204

தி.பொ.ச. உரை: பிறர்க்குத் தீமைதருவதான செயல்களை மறந்துகூட செய்யவேண்டாம். அப்படிச்செய்தால் அவ் வினைகளின் பயனை காலப்போக்கில் செய்தவரே அனுபவிக்க வேண்டி வரும். ( இங்கே அறமானது காலப் பொருளில் பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' என்று இன்னோரிடத்தில் விளக்கினார். கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழியும் இதன் அடிப்படையில் உருவானதே. )
=====================================================

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.  - 205

தி.பொ.ச. உரை: வறியவன் ( தானே என்ன செய்துவிட முடியும்) என்று எண்ணி அவரிடத்துத் தீமை செய்யவேண்டாம். செய்தால் அனைத்தையும் இழந்து அவரை விடவும் வறியவனாக வேண்டிவரும்.
======================================================

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.  - 206

தி.பொ.ச. உரை: மனக்கவலையால் தாம் வருந்தக்கூடாது என்று விரும்புகிறவர்கள் பிறரிடத்து ஒருபோதும் தீமை புரியக் கூடாது. ( பிறருக்குத் தீமை செய்தால் கண்டிப்பாக மனக்கவலையால் வருந்தி வாழ நேரிடும் என்பது இதனான் பெறப்பட்டது. ஈண்டு நோய் என்பது மனக்கவலையினையும் அடல் என்பது வருத்துதலையும்ம் குறித்து வந்துள்ளது. )
======================================================

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.  -  207

தி.பொ.ச. உரை: (தவறு செய்த ஒருவன் அதற்காக) எவ்வளவு அடி வாங்கினாலும் அதனின்று தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் அவன் செய்த தீவினையின் பயனை  அனுபவிப்பதில் இருந்து அவன் தப்பமுடியாது. ( அரசனின் தண்டனையில் இருந்து விடுதலை பெற்றாலும் அறத்தின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பது இதனான் பெறப்பட்டது. இது எவ்வாறு என்பதனை அடுத்த குறளில் விளக்குகிறார். எனைப்பகை என்பதில் உள்ள பகையானது பகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் அமைந்த பெயராகும். பகைத்தல் = அடித்தல். பகையுறுதல் = அடி வாங்குதல். அகராதி காண்க. )
=====================================================

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.  -  208

தி.பொ.ச. உரை: தனது அடியில் உறைகின்ற நிழலைப் போலவே தீமை செய்தவர் இறக்கும்வரையிலும் அவரைத் துன்பமானது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
=================================================

தன்னைத்தான் காவல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.  -  209

தி.பொ.ச. உரை: (துன்பங்களில் இருந்து) ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு ஒரே வழி, பிறர்க்குத் தீமை பயக்கின்ற எச் செயலையும் செய்யக்கூடாது. ( காதலனாயின் என்று வருவது பாடபேதம். ) 
====================================================

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்வான் எனின்.  -  210

தி.பொ.ச. உரை: ஒருவன் தனக்கு வரும் செல்வத்தைக் கருதி பிறர்க்குத் தீமை செய்வானேல், அவன் என்றும் நீங்காத வறுமைநிலையே அடைவான் என்று அறிக. ( அருங்கேடன் = நீங்குதற்கரிய வறுமையினை உடையவன். கேடில்லாதவன் என்று பொருள் கொள்வது இங்கு பொருந்தாது. காரணம், அவ்வாறு பொருள் கொள்வதே ஆசிரியரின் நோக்கம் என்றால் கேடிலி என்று கூறியிருக்கலாம். அதுமட்டுமின்றி, தீவினை செய்யான் என்று கூறினாலே போதுமானதாயிருக்க, மருங்கோடி என்று கூறுவதும் தேவையற்றுப் போகிறது. எனவே தீவினை செய்வான் என்று வருவதே பொருத்தமாகப் படுகிறது. செய்யான் என்று வருவது பாடபேதம். மருங்கு = செல்வம். ஓடுதல் = கருதுதல். அகராதி காண்க. ) 
===========================xxxxxx====================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.