Thursday, November 14, 2013

அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.  - 161

தி.பொ.ச. உரை: ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை எண்ணம் தோன்றாத வரையிலும் தான் ஒழுக்கமாகவே இருப்பதாகக் கருதலாம். ( ஆம், உள்ளத்தில் பொறாமை தலைதூக்கிவிட்டால் அவனது செயலில் அறம் இருக்காது. ஆகவே தான் ஒழுக்கம் கெடும் என்கிறார். )
======================================================

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.  -  162

தி.பொ.ச. உரை: எவரிடத்திலும் எச் சூழலிலும் பொறாமை கொள்ளாத குணம் ஒருவனிடத்து உள்ளதென்றால் அதைவிட சிறந்த செல்வம் வேறு இல்லை. ( இதனான்  பொறாமை அற்றவன் வறியவனாகவே இருந்தாலும் அவனிடத்தில் உள்ள நற்பண்புகளால் பொருட்செல்வம் தானே பெருகும் என்றார். )
=====================================================
   
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். - 163

தி.பொ.ச. உரை: பிறரது உயர்வினைக் கண்டு பொறாமை கொள்பவனின் அறிவும் செல்வமும் தாமே அழியும். ( பொறாமையானது முதலில் ஒருவனது அறிவை அழிக்கிறது. அறிவில்லாமல் செய்யும் செயல்களால் அவனது செல்வமும் நாளடைவில் அழிகிறது. இங்கு அறன் = அறிவு. ஆக்கம் = செல்வம். அகராதி காண்க. )
==================================================
   
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.  -  164

தி.பொ.ச. உரை: வழுக்கு நிலத்தில் நடந்தால் உண்டாகும் துன்பங்களை அறிந்த சான்றோர் பிறர்மேல் பொறாமை கொண்டு தீமை செய்யமாட்டார்கள். ( இங்கு பொறாமைக் குணத்தினை வழுக்கு நிலத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர். ஏனென்றால் வழுக்கு நிலமானது அதில் நடக்க முற்படுவோரை கீழே விழவைப்பதுடன் மீண்டும் எழமுடியாமல் செய்து விடும் தன்மையது. அதைப் போலவே பொறாமைக் குணமும் ஒருவனை அவன் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் விழ வைத்து மீண்டும் எழமுடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதை சான்றோர்கள் அறிவர் என்பதால் ஒருபோதும் பொறாமை கொள்ளமாட்டார். இங்கு இழுக்குதல் = வழுக்குதல். இழுக்காறு = வழுக்குப்பாதை, வழுக்கு நிலம். அகராதி காண்க. )
================================================
   
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.  -  165

தி.பொ.ச. உரை: எதிரிகளிடம் இருந்து ஒருவன் தப்பிப் பிழைத்தாலும் அவன் கொண்ட பொறாமைக் குணமானது தப்பாமல் அவனைக் கொல்லும்.
===============================================
   
தொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.  -  166

தி.பொ.ச. உரை: பிறர் அணியும் ஆடை அணிகலன்களைக் கண்டு ஒருவன் பொறாமை கொண்டால் அது ( அவனை மட்டுமின்றி ) அவனது குடும்பத்தார் அனைவரையும் உடுக்க உடையில்லாத உண்ண உணவில்லாத வறுமை நிலைக்குத் தள்ளிவிடும். ( பொதுவாக ஒருவர் அணிகின்ற ஆடை மற்றும் நகைகளைக் கண்டுதான் மற்றவருக்குப் பொறாமை எழத் துவங்குகிறது இல்லையா?. அதனால் தான் இங்கு 'தொடுப்பது' என்று கூறுகிறார் வள்ளுவர். இங்கு தொடுத்தல் = அணிதல். தொடுப்பது = அணிவது. அகராதி காண்க. கொடுப்பது என வருவது பாடபேதம். )
================================================
   
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
கவ்வையே காட்டி விடும்.  -  167

தி.பொ.ச. உரை: பேராசையினால் பொறாமைகொண்டு திரியும் ஒருவனை அவனது மனைவியின் ஆரவார ( சண்டை) ஒலியே காட்டிக் கொடுத்துவிடும். ( இது எவ்வாறென்றால் பொறாமைக் குணமானது ஒருவனது மன நிம்மதியினைக் குலைப்பதுடன் அவனது உடல்நலத்தினையும் பாதிக்கிறது. இதனான் அவனது குடும்பத்தில் வறுமை தலைதூக்குகிறது. இதன் விளைவு அவனுடைய மனைவி அவனுடன் சண்டை போடத் துவங்குகிறாள். இங்கு கவ்வை =  ஆரவார ஒலி. செய்யவள் = இல்லாள், மனைவி. செய்யவள் தவ்வை ஆய்வுக் கட்டுரை காண்க. தவ்வையை என வருவது பாடபேதம். )
==================================================
   
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.  -  168

தி.பொ.ச. உரை: பொறாமை எனப்படும் ஒரு எண்ணம் ஒருவனிடத்தே தோன்றி நிலைக்குமேயானால் அது அவனது பெருமைகள் அனைத்தையும் அழிக்கவல்ல தீய வழியில் அவனைச் செலுத்திவிடும். ( எனவே பொறாமை எண்ணம் ஒருவருக்குத் தோன்றும்போது தனது பெருமைகளை நினைத்துப் பார்த்து அவர் அவ் எண்ணத்தை உடனே கைவிட வேண்டும் என்கிறார். இங்கு திரு = சிறப்பு, பெருமை. பாவித்தல் = எண்ணுதல் ---> பாவி = எண்ணம். அகராதி காண்க. )
=================================================
   
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.  -  169

தி.பொ.ச. உரை: பொறாமைக்குணம் உடையவனின் செல்வமும் அதில்லாதவனின் வறுமையும் விதியினால் தீர்மானிக்கப்படும். ( இதற்கு முன்னர் சொன்ன குறள்களில் பொறாமைக் குணம் உடையவன் வறுமையினையும் அதில்லாதவன் செல்வத்தையும் பெறுவான் என்றார். இக் குறளிலோ இக் கருத்துக்கு நேர்மாறாகக் கூறுகிறார். காரணம், விதியாகும். விதி வலிமை மிக்கது. நமது செயல்கள் நல்லதாகவே இருந்தாலும் அதன் பயனைத் தீயதாக்கவும் தீய செயல்களின் பயனை நன்மையாக மாற்றவும் விதியினால் முடியும். விதியைப் பற்றி மேலும் அறிய ' தீதும் நன்றும் - விதியை வெல்ல முடியும் ' என்ற ஆய்வுக் கட்டுரை காண்க. விதி எப்போதும் தன்னை மறைத்தே வைத்திருப்பதைப் போல விதியைக் குறிக்கும் ஊழ் என்ற சொல்லையும் இக் குறளில் நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்தார் என்க. இங்கு நினைத்தல் = தீர்மானித்தல். ஆக்கம் = செல்வம். கேடு = வறுமை. அகராதி காண்க. )
=================================================
   
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.  - 170

தி.பொ.ச. உரை: பொறாமைக் குணத்தினால் பெருமை அடைந்தவர் யாருமில்லை. பொறாமையற்றதால் பெருமை குன்றி சிறுமை அடைந்தாரும் இல்லை. ( பொறாமைக் குணம் உடைய ஒருவன் விதிவசத்தால் செல்வம் பெற முடியுமே ஒழிய ஒருக்காலும் அதனால் அவன் பெருமை அடைய முடியாது. அதேபோல் பொறாமையற்ற ஒருவன் விதிவசத்தால் வறுமைநிலை உற்றாலும் அதனால் அவனது செல்வம் குறையுமே ஒழிய பெருமை குன்றாது என்றார். ) 
============================ தமிழ் வாழ்க!=============

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.