Saturday, July 28, 2012

கடவுள் வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    யகவன் முதற்றே உலகு. -1

தி.பொ.ச.உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தினை முதலாகக் கொண்டுள்ளன. அதைப்போல இந்த உலகம் காரண அறிவாய் விளங்கும் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது.  ( ஆய்வுக் கட்டுரை )
========================================

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின். - 2

தி.பொ.ச. உரை: தூய அறிவினனான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தமது சிந்தையில் பேணாதவர்கள் என்ன கற்றிருந்தும் என்ன பயன்?. (ஒன்றுக்கும் உதவாது!)
=======================================

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். - 3

தி.பொ.ச. உரை: பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை மிக்க திருவடிகளைச் சேர்ந்தவர்கள் இப் புவியில் (புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர்.  (ஆய்வுக் கட்டுரை)
=====================================

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.   - 4

தி.பொ.ச.உரை:  விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கு எவ்விடத்தும் துன்பம் என்பதே இல்லை.
=====================================

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு.  - 5

தி.பொ.ச. உரை: இறைவனையே அடையக் கூடிய பொருளாகக் கொண்டு சரணடைந்தோரிடத்தில் இருளாகிய விதியினால் ஏற்படுகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை. ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பொறிவாயில் அந்தணன்தாள் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.  - 6

தி.பொ.ச. உரை: உருவமும் பெயருமற்ற அந்தணனனாகிய இறைவனின் திருவடிகளைக் கள்ளமில்லாத ஒழுக்கத்துடன் பணிந்து நின்றவர்கள்  (இவ் உலகில் புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.- 7

தி.பொ.ச. உரை: தனக்கு ஒப்புமையில்லாத ஒருவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்குத் தமது மனக்கவலைகளை மாற்றிக் கொள்வது அரிதான செயலாகும்.
====================================

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.  - 8

தி.பொ.ச. உரை: அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்கு பிறவி என்னும் ஆழக்குழியினைக் கடப்பது அரிதான செயலாகும். ( ஆய்வுக் கட்டுரை)
===================================

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.  - 9

தி.பொ.ச. உரை: எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத ஒரு தலைவனிடத்தில் வீரமும் பொருட்செல்வமும் இருந்தும் பயனில்லாமல் போகும். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.  -10

தி.பொ.ச. உரை: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரேயல்லால் பிறர் பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது இயலாது.
=====================================

6 comments:

 1. ORU PUTHIYA URAIVU KAL... URAIGAL

  GOOD JOB

  VALGHA VALAMUDAN-VALARGHA THIRUVALLUVAM

  ANBUDAN,
  T.V.S.KRISHNAN

  ReplyDelete
  Replies
  1. மிகவும் பாணித்துக் கூறுவதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் உங்கள் கருத்தைப் பார்த்தேன். வாழ்த்திற்கு நன்றி நண்பரே.:))

   Delete
 2. சமணம் என்ற சொல் சிரமணர் என்பதன் திரிபு .
  இது ஜைனர் , அசீவகர் , மற்றும் பௌத்தர்களையும்
  குறிக்கும் .எனவே நான் ஜைனர் என்று எழுதுகிறேன்

  ஆதி பகவன் என்பது ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் .
  இவர்க்கு ரிஷப தேவர் என்று பெயர் .
  ஜைனர்கள் சொல்வதின் படி ரிஷப தேவர் காலத்தில்தான்
  எழுத்துக்கள் ஏற்பட்டன - அதற்கு முன்னால் எழுத்து கிடையாது .
  ரிஷப தேவரின் மகள் பெயர் பிராமி .
  அந்த எழுத்துக்கள் பிராமி என்ற பெயர் வந்தது.

  இந்த குறளின் நேர் பொருள் - எழுத்துக்கள் ஆதி பகவன் ஏற்படுத்ததியது

  ReplyDelete
  Replies
  1. வள்ளுவம் சமய சார்பற்றது. தயவுசெய்து அவரை எந்த மதம் நோக்கியும் இழுத்து உலகப் பொதுமறை என்னும் மதிப்பைக் கெடுக்க வேண்டாம் நண்பரே.

   Delete
 3. ungal pathivugal miga sirappu. enaku oru santhegam ullathu. வாலறிவன் endra padhathin proul enaa. urai aasiriyargal தூய அறிவினனான endru koorukirargal. atharku eppadi intha porul vanthathu endru enaku puriyavillai. ithai satru vilakinaal nandrai irukum

  ReplyDelete
  Replies
  1. பாணித்து விடை கூறுவதற்கு முதலில் மன்னிக்கவும். இப்போதுதான் உங்கள் கேள்வியைப் பார்த்தேன். அறிவில் பழுது இருந்தால் அது காரறிவு. குறைபாடு / பழுது அற்ற முழுமையான அறிவு வாலறிவு. வால் = வெண்மை, ஒளி. கதிரவனைப் போல ஒளிவிடும் அறிவு. தூய்மையான பொருளே ஒளிரும் என்பதால் இறைவனின் தூய்மையான ஒளிரும் அறிவு வாலறிவு எனப்பட்டது.

   Delete

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.