Monday, October 28, 2013

பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.  -  151

தி.பொ.ச. உரை: கொடிய ஆயுதங்களால் தன்னைக் குத்திக் குழிபறித்த போதும் ஒருவனைத் தாங்கி நிற்கும் பூமி போல கொடிய சொற்களால் தன்னை ஒருவன் தாக்கி வருத்தியபோதும் பதிலுக்கு அவனைத் தண்டிக்காமல் பொறுமை காப்பது தலைசிறந்த பண்பாகும். ( பூமியின் உதவியால் வாழ்கின்ற நாம் பூமியை வெட்டிக் காயப்படுத்தும் போதும் அது பொறுமையாய் இருந்து தனது உதவியைத் தொடர்ந்து செய்கிறது. அதைப்போல நாம் உதவிசெய்த ஒருவர் நம்மையே பதம் பார்க்கும்போதும் நாம் பொறுமைகாத்து அவ் உதவியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்கிறார். )
======================================================
   
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.  -  152

தி.பொ.ச. உரை: ஒருவர் வரம்புமீறி நடந்துகொண்டாலும் (அவரிடத்து சினம் கொள்ளாமல்) பொறுமையாய் இருப்பது நல்லது.  மேலும் அவரது செயலை நினைவில் கொள்ளாமல் மறந்து விடுவது அதைவிட நல்லது. ( காரணம், இவ்வாறு செய்வதன் மூலம் அவருக்கும் நமக்கும் பகை ஏற்படாமல் நட்பு உருவாகும் வாய்ப்புள்ளது என்பதால். )
=====================================================

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.  -  153

தி.பொ.ச. உரை: விருந்தினர்க்கு உணவளிக்க இயலாமையே மிகப் பெரிய வறுமையாகும். அதைப்போல மென்மையானவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்திருப்பதே மிகப் பெரிய வலிமையாகும். ( இங்கு மடவார் = மென்மையானவர்கள், அதாவது பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள். தம்மைவிட மென்மையான இவர்கள் தம்மிடத்து தவறுசெய்யும்பொழுது அவர்களைத் தண்டிப்பது பெரிய வலிமையாகாது. அவர்மீது சினம்கொள்ள முழு அதிகாரமிருந்தும் சினம் கொள்ளாமல் அவர்தம் தவறுகளைப் பொறுத்துச் செல்வதே மிகப் பெரிய வலிமையாகும் என்கிறார். )
===================================================
   
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.  -  154

தி.பொ.ச. உரை: தம்மிடத்துள்ள சிறந்த அறிவு தம்மைவிட்டு நீங்காதிருக்க விரும்பினால் ஒருவர் பொறுமையினையே தனது முதன்மை ஒழுக்கமாகக் கொண்டு செயல்புரிய வேண்டும். ( அதாவது ஒருவர் பொறுமை இழந்து சினம் கொள்ளும்பொழுது அவரது அறிவு தடுமாறி தனது பெருமைக்கு ஒவ்வாத செயலில் ஈடுபடத் துவங்குகிறார்.  இதைத்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுகின்றனர். இங்கு நிறை = அறிவு. அகராதி காண்க. )
==================================================

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.  -  155

தி.பொ.ச. உரை: துன்பங்களைப் பொறுக்காமல் சினம் கொண்டு தண்டிக்கும் பண்புடையவரை உலகத்தார் ஒருபொருளாகவே கருதமாட்டார். ஆனால் எவ்வளவு தீங்கு செய்தாலும் பொறுமை காக்கின்றவர்களைப் பொன்னாகப் பொதிந்துவைத்துப் போற்றுவர். ( இது எவ்வாறெனின், சூடேற்றும்பொழுது கொதிக்கின்ற தன்மையுடைய ஒரு நீர்மமானது சிறிது நேரத்தில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் எவ்வளவு சூடாக்கினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு ஒளிர்கின்ற பொன்னை மக்கள் விரும்பித் தம்முடன் பொதிந்துவைத்துக் கொண்டு போற்றுகின்றனர் அன்றோ.! )
=====================================================
   
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.  - 156

தி.பொ.ச. உரை: தெரிந்தே துன்பம் செய்தவருக்கு அந்த ஒருபொழுது வேண்டுமானால் இன்பம் தருவதாய் இருக்கலாம். ஆனால் அத் துன்பத்தைப் பொறுத்தவரோ இந்த உலகம் அழியும்வரை அழியாத புகழ் பெறுவர். ( இதற்கு சான்றாக காந்தியடிகளைக் காட்டலாம். காந்தியை சுட்டுக் கொன்றதன் மூலம் கோட்சே அந்த ஒருபொழுதில் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் தன்னை சுட்ட கோட்சேவை யாரும் தாக்காமல் பாதுகாத்து அவரை மன்னித்து விட்டதனால் மோகன்தாஸ் காந்தி இன்றுவரை மக்கள் உள்ளத்தில் மகாத்மா காந்தியாய் உயர்ந்து நிற்கிறார். இங்கு ஒறுத்தல் = வருத்துதல். நாள் = காலம், பொழுது. அகராதி காண்க. )
======================================================
  
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.  -  157

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற முறையிலே பிறர் நம்மிடத்தில் நடந்து கொண்டால் பொறுமை காக்க வேண்டுமே ஒழிய உள்ளம் அழிந்து நாமும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.  ( இதனால் நேர்மையற்று நடந்து கொண்டவர் தனது தவறை உணர்வதற்கும் திருந்துவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார். அவ்வாறு அல்லாமல் பதிலுக்கு நாமும் நேர்மையற்று நடந்துகொண்டால் இருவருமே தவறு செய்தவர்களாவதுடன் சமுதாய ஒழுக்கமும் கட்டுப்பாடும் முற்றிலும் சிதையத் துவங்கி விடும். இங்கு திறன் = நேர்மை. நோதல் = சிதைதல், அழிதல். அகராதி காண்க. )
======================================================
   
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.  - 158

தி.பொ.ச. உரை: செருக்கினால் ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது யார் அதைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு இருக்கின்றாரோ அவரே இறுதியில் வெற்றி பெற்றவராகிறார். ( இதற்கு சான்றாக பூமியைக் கூறலாம். பலவகைகளில் நமக்கு உதவியாய் இருக்கும் பூமியை நாம் குத்துகிறோம்; வெட்டுகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பூமிதான் இறுதியில் வெல்கிறது. ஆம், நம் வாழ்நாள் முடிந்ததும் அந்த பூமிக்குள் தான் நாம் அடங்கி விடுகிறோம். )
========================================================
   
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.  -  159

தி.பொ.ச. உரை: வரம்புமீறி பேசுபவர்களின் தீய சொற்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்போர் துறவிகளைக் காட்டிலும் மனவலிமை மிக்கவர்கள். ( துறவிகள் முற்றும் துறந்தவர்கள் ஆதலால் அவர்கள் சினத்தையும் துறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு சினமே எழாது. ஆனால் ஒரு இல்லறத்தோன் சினத்தை முழுவதும் துறவாத நிலையில் பொங்கிவரும் சினத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருப்பதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். அதனால் தான் இவ்வாறு கூறுகிறார். இங்கு தூய்மை = வலிமை. )
======================================================
   
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   -  160

தி.பொ.ச. உரை: பிறர் கூறுகின்ற கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுமையாக இருக்கின்றவர்கள் உண்ணாமல் நோன்பு இருப்போரைக் காட்டிலும் பெரியராம். ( காரணம், உண்ணா நோன்பு இருப்பதற்கு உடல்வலிமை போதும். ஆனால் இன்னாநோன்பு இருப்பதற்கு மனவலிமை தேவை. உடல்வலிமையைக் காட்டிலும் மனவலிமை மேலானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் வள்ளுவர். )
======================== வாழ்க தமிழ் ! ===================
   

Saturday, October 26, 2013

பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.   -  141

தி.பொ.ச. உரை: அறம் என்பதன் மெய்ப்பொருளைத் தெளிவாகக் கண்ட அறிஞர்களிடத்து பிறரது உடைமையாளாகிய மனைவியை விரும்புகின்ற அறிவின்மை இல்லை. ( பிறரது மனைவியை நேசிக்கும் செயலை அறத்தின் நீங்கிய செயல் என்றார்.  )
====================================================
   
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.  -  142

தி.பொ.ச. உரை: பிறர் மனைவியை நேசிப்பவர்கள் (சாதாரண முட்டாள்கள் அல்லர்) அறிவின் கடைக்கோடியில் இருக்கும் அறிவிலிகளைக் காட்டிலும் மிகப் பெரிய முட்டாள்கள் ஆவர். ( இங்கு அறன் = ஞானம், அறிவு. அகராதி காண்க. பிறர் மனைவியை நேசிப்பதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் என்கிறார். )
=====================================================
   
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.   -  143

தி.பொ.ச. உரை: தன்னை மிகவும் நம்பியவரின் மனைவியை விரும்பி அவருக்குத் தீமை புரிகின்றவனை பிணத்திற்கு ஒப்பானவனாகவே கருதவேண்டும். ( ஏனென்றால் மாந்தர்க்கு மானமே உயிராம்; மானங்கெட்ட இச் செயலைச் செய்பவன் உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பானவனே அன்றோ!. )
=====================================================
   
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.  - 144

தி.பொ.ச. உரை: தினையளவு கூட யோசிக்காமல் பிறர் மனைவியை விரும்புவனிடத்தில் மலையளவு பொருட்களும் பெருமைகளும் இருந்தாலும் அவை அத்தனையும் அழியும். ( இதனான் அறிவாலும் செல்வத்தாலும் பலத்தாலும் புகழ் மிக்கோரும் கூட பிறர் மனைவி மேல் காதல் கொள்ளத் துவங்கினால் தம் பெருமை அனைத்தையும் இழப்பர் என்கிறார். )
=====================================================
   
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.  - 145

தி.பொ.ச. உரை: பிறர் மனைவியை விரும்பி அவரை அடைவது எளிய செயலாகவே ஒருவர்க்குத் தோன்றினாலும் அதனால் அவர்க்கு உண்டாகும் கேட்டிலிருந்து மீள்வதென்பது முடியாத செயலாகும்.  ( இதிலிருந்து எந்த ஒரு தவறையும் செய்வது எளிது என்பதும் தவறுக்கான தண்டனையில் இருந்து தப்புவதோ கடினமான செயல் என்பதும் பெற்றியாம். )
======================================================
   
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -  146

தி.பொ.ச. உரை: பிறர் மனைவிமேல் விருப்பம் கொண்டு சேர்பவனுக்கு அவன் விரும்பாமலே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் அவனிடத்து வந்து சேரும். ( இங்கு பகை என்பது அவளது கணவன் மற்றும் அவன் சுற்றத்தாரின் பகை. பாவம் என்பது அறம் நீங்கியதால் வரும் பயன். அச்சம் என்பது பகையினால் வருவது. பழி என்பது பாவத்தினால் வருவது. )
====================================================
   
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.  - 147

தி.பொ.ச. உரை: பிறன் மனைவி மேல் விருப்பம் கொள்ளாமல் தன் மனைவியை மட்டுமே நயந்து வாழ்க்கை நடத்துபவனே அற வழியில் வாழ்பவனாகிறான். ( இல்லறமல்லது நல்லறமில்லை என்பது ஆன்றோர் வாக்கானாலும் இல்லறத்தில் இருந்துகொண்டே பிறன்மனை நோக்கினால் அந்த இல்லறம் நல்லறம் அல்ல என்கிறார். )
====================================================
   
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.  -  148

தி.பொ.ச. உரை: பேராண்மை என்பது யாதெனின் அது பிறர் மனைவியை விரும்பாத பண்பேயாகும். அதுவே சான்றோருக்குப் பெருமை சேர்க்கின்ற அற ஒழுக்கமாகும். ( ஒரு பெண்ணை ஆளுவதையே ஆண்மை என்றும் பல பெண்களை ஆளுவதே பேராண்மை என்றும் தவறாகப் பொருள் கொண்டோர் பலர் உள்ளனர். அவர்கள் இக் குறளை முதலில் படித்து திருந்துவராக. )
===================================================
   
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.  - 149

தி.பொ.ச. உரை: கடல்நீர் சூழ்ந்த இவ் உலகில் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்குத் தகுதியானவர் யாரென்றால் அவர் பிறரது மனைவியின் மையுண்ட கண்களை காம விருப்பத்துடன் நோக்காதவரே ஆவார். ( இங்கு நாமநீர் வைப்பு என்பதின் மூலம் கடல்நீர் சூழ்ந்த இவ் உலகத்தையும் பெண்ணின் மையுண்ட கண்களையும் ஒருங்கே குறித்தார் என்க. தோள் என்பது கண்ணையும் தோள்தோய்தல் என்பது கண்ணோடு கண் பார்த்தலையும் குறிக்கும். தோள் என்றால் என்ன? ஆய்வுக் கட்டுரை காண்க.)
=====================================================
   
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   -  150

தி.பொ.ச. உரை: அறநெறியினின்று விலகி பிற மக்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் பிறன் மனைவியை விரும்பாதிருப்பது நன்றே.  ( காரணம், பிறன்மனை நோக்குவதால் விளையும் கேட்டில் இருந்து மீள முடியாது என்பதால். இதனான் பிறன் மனை நோக்குதல் பெரும்பாவம் என்பது வலியுறுத்தப்பட்டது. )
===================== வாழ்க தமிழ் ! =================
   

Friday, October 25, 2013

ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.  -  131

தி.பொ.ச. உரை: ஒழுக்கமானது (அதைப் பேணுபவருக்கும் பேணப்படுபவருக்கும்) நன்மையினைத்  தரக்கூடியது என்பதால் அவ் ஒழுக்கத்தினை அனைத்து உயிர்களிடத்திலும் தவறாமல் பேண வேண்டும். ( அதாவது ஒழுக்கத்துடன் நாம் ஒருவரிடத்தில் நடந்துகொண்டால் அவரும் ஒழுக்கத்துடனே நம்மிடத்தில் நடந்து கொள்வார். இதனான் இருவருக்கும் நன்மையே கிடைக்கும் என்றார். இங்கு ' உயிரினும் ' என்பது ' அனைத்து உயிரின்கண்ணும் ' என்ற பொருளில் வந்துள்ளது. )
=======================================================

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.  -  132

தி.பொ.ச. உரை: எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை விரும்பிப் பேணவேண்டும். ஏனென்றால் துணையாய் இருந்து நம் உயிரினைக் காப்பது அவ் ஒழுக்கமே என்பது சான்றோர் துணிபாகும்.
======================================================

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். - 133

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் உடையவனே குடிமகன் ஆவான். ஒழுக்கம் தவறி நடப்பவன் குடிமகனாகும் தன்மையினின்று இழிந்த கீழ்மகன் ஆவான். ( அதாவது தான் வாழும் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதைச் செய்வதற்கு அவனுக்கு உதவியாய் இருப்பது அவனது ஒழுக்கமே ஆகும். இந்த ஒழுக்கத்தினின்று அவன் தவறும்பொழுது நாட்டில் குடிமகனாய் வாழும் தகுதியை இழந்து காட்டில் வாழும் விலங்கினையொத்த கீழ்மகன் ஆகின்றான். )
======================================================
   
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
சிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  - 134

தி.பொ.ச. உரை: (தனது துறைசார்ந்த அறிவினால் சிறப்பு பெற்ற) ஒரு ஆசிரியர் தனது துறைசார்ந்த அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( அதனால் அவர் பெருமை குறையுமே தவிர முற்றும் அழியாது. ) ஆனால் அவர் தனது ஒழுக்கம் குன்ற அதாவது ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது பெருமை முற்றும் அழியும். ( இங்கு பார்ப்பான் என்று எந்த வருணத்தாரையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை என்று அறிக. துறை சார்ந்த அறிவில் சிறப்பு பெற்றவர்கள் அத் துறையின் மேற்பார்வையாளராக அல்லது ஆசிரியராக விளங்குவது இயல்பு. இங்கு பார்த்தல் = மேற்பார்வையிடுதல், மதிப்பிடுதல். அகராதி காண்க. இதனின்று பார்ப்பான் = மேற்பார்வையிடுபவன், மதிப்பிடுபவன், ஆசிரியன் என்றும் வரும். சிறப்பு என வருவது பாடபேதம். )
======================================================
   
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.  - 135
 
தி.பொ.ச. உரை: பொறாமை உடையவன் நல்ல செயல்களைச் செய்யமாட்டான். அதைப்போல ஒழுக்கமில்லாதவனும் பிறர் போற்றத்தக்க உயர்வான செயல்களைச் செய்ய மாட்டான். ( இதனான் பொறாமை கொள்பவனின் ஒழுக்கமும் கெடும் என்பதுடன் ஒருவர் மீது ஏற்படும் பொறாமையே நம் ஒழுக்கம் கெடப்போவதற்கான அறிகுறி என்பதும் பெறப்படுகிறது. )
=====================================================
   
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   -  136

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் தவறி நடத்தலால் வரும் கேட்டினை அறிந்து ஒருபோதும் ஒழுக்கத்தினின்று விலகாதிருப்பது உள்ளத்தில் ஊக்கமுடையவர்களின் பண்பாகும்.  ( இதனான் மனதில் உறுதி உள்ளவரை மட்டுமே ஒழுக்கம் தவறாமல் நடக்க இயலும் என்பதும் மனவலிமை குன்றும்போது ஒழுக்கம் மீறப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. ஏதம் = கேடு. உரவோர் = ஊக்கமுடையோர், மனவலிமையுடையோர். ஒல்குதல் = சாய்தல், விலகுதல். அகராதி காண்க. )
========================================================
   
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.  -  137

தி.பொ.ச. உரை: ஒழுக்கத்தைப் பேணி நடப்பவர்கள் என்றுமே நீங்காத மேன்மையினைப் பெறுவர். ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் என்றுமே நீங்காத பழியினைப் பெறுவர். ( எய்துதல் = பெறுதல், நீங்குதல். அகராதி காண்க. எய்துவர் = பெறுவர். எய்தா = நீங்காத. எய்தா என்பதனை மேன்மையுடனும் பழியுடனும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க. )
=====================================================

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.  - 138

தி.பொ.ச. உரை: நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. )
======================================================
   
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.  - 139

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் தவறாமல் நடப்பவர்கள் தவறியும் தீய சொற்களை உண்மையாகப் பேச மாட்டார்கள். அவர்களால் அப்படிப் பேசவும் முடியாது. ( இங்கு வாய் = உண்மை. வாயால் = உண்மையால் அதாவது உண்மையாக. வாயால் சொலல் = உண்மையாகப் பேசுதல் அதாவது சொல்லிய ஒரு பொய்யை உண்மையாக்க மேலும் மேலும் பல பொய்களைப் பேசுதல்.  பொய்மையும் வாய்மையிடத்த என்று ஏற்கெனவே வள்ளுவர் கூறியிருப்பதால் ஒழுக்கமானவர்களும் புரைதீர்ந்த நன்மை பயக்குமிடத்து பொய் பேசுவார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தாம் கூறிய அப் பொய்யினை உண்மையாக்க முயலமாட்டார்கள். காரணம், பொய்பேசிப் பழக்கமில்லை ஆதலால் அவர்களால் அதைச் செய்யவும் முடியாது என்கிறார். )
===================================================
   
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.  - 140

தி.பொ.ச. உரை: ஒழுக்கமிருந்தால் தான் உலகம் நம்முடன் ஒட்டும். ஒழுக்கமில்லாவிட்டால் உலகம் ஒட்டாது. இதை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடனே ஆவான். ( ஆம், ஒழுக்கத்துடன் நடந்து கொள்பவரை அனைவரும் விரும்பி அவருடன் பழகுவர். ஒழுக்கமின்றி நடந்து கொள்பவனைக் கண்டால் யாருக்கும் பிடிக்காது. யாரும் அவனை அண்டவும் மாட்டார்கள். இதனை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடன் தானே!. )
=================== வாழ்க தமிழ்!==========================
  

Thursday, October 24, 2013

நடுவுநிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.  -  111

தி.பொ.ச. உரை: வேறுபாடுகளின் நடுவாக நின்று செயல்படும் ஆற்றலை ஒருவர் பெற்றிருப்பின் அதுவொன்றே அவருக்கு நல்ல தகுதி எனப்படும். ( இங்கு வேறுபாடுகள் என்பது தன்குடும்பம், உறவினர், நண்பர், பகைவர் போன்ற உறவுமுறை வேறுபாடுகளையும் ஏழை, பணக்காரன் போன்ற பொருளாதார நிலை வேறுபாடுகளையும் இன்னபிற வேறுபாடுகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த வேறுபாடுகளின் ஒருபக்கமாக சாய்ந்துவிடாமல் நடுவாக நின்று செயலாற்றுவதே ஒரு நல்ல மனிதருக்கான சிறந்த தகுதி என்கிறார். இன் என்னும் வேற்றுமை உருபுக்கு பதிலாக ஆல் என்னும் உருபு மயங்கி வந்துள்ளது. பகுதி = வேறுபாடு. பால் = நடு, மையம். பால்படுதல் = நடுவுநிற்றல். அகராதி காண்க.)
=======================================================

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.  -  112

தி.பொ.ச. உரை: நேர்மையாக வாழும் ஒருவருடைய செயல்கள் (அவர் மறைந்தாலும் தாம்) அழியாமல் நின்று அவரது பரம்பரையையும் காத்து நிற்கும். ( இது எவ்வாறெனின், ஒருவரது நேர்மையால் மகிழ்ச்சியாக வாழ்ந்தோர் அவரது பரம்பரையினர் துன்புற்றவுழிக் கைவிடாமல் காத்து நிற்பர் என்பதாம். ஆக்கம் = செயல். )   
======================================================

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.  - 113

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற செயலினால் ஒருவருக்கு நல்ல பொருளும் நல்ல பெயரும் கிடைப்பதாகவே இருந்தாலும் அச் செயலை அப்பொழுதே கைவிடல் வேண்டும். ( ஏனென்றால் அப்படிக் கிடைத்த செல்வமும் பெயரும் நீண்ட நாள் நிலைத்து நிற்காது என்பதுடன் தனக்குப்பின் தனது பரம்பரையினையே அது பாதிக்கும் என்பதால். ஆக்கம் = செயல். )
=======================================================

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.  -  114

தி.பொ.ச. உரை: ஒருவர் நேர்மையானவராய் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அவரது பரம்பரையினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ( ஆம், குறள் 112 ல் கூறியபடி, நேர்மையோடு ஒருவர் வாழ்ந்திருந்தால் அது அவரது பரம்பரையை எளிமையாக வாழவைத்தாலும் அழியவிடாமல் காத்திருக்கும். நேர்மையற்று வாழ்ந்தவரின் பரம்பரையோ பேராசையால் கெட்டு அழிந்திருக்கும். )
=======================================================
   
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   -  115

தி.பொ.ச. உரை: சான்றோருக்கு அழகு சேர்க்கும் உண்மையான அணிகலன் அவரது நேர்மையான நெஞ்சம் மட்டுமே; ஏனென்றால் அவரது பிற அணிகலன்களுக்குத் தேய்வும் வளர்ச்சியும் இல்லாமல் இல்லை. ( இதன்மூலம் நேர்மையானவர்கள் ஈட்டிய பொருள் தேயலாம்; பெருகலாம். ஆனால் அவர்கள் ஈட்டிய நற்பெயர் ஒருநாளும் மாறுவதில்லை என்கிறார். )
======================================================
 
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.  -  116

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற செயலைச் செய்ய நெஞ்சம் விழையும்போது இதனால் தனக்குக் கேடு வரும் என்று அந் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துங்கள். ( இதனான் தவறான வழியில் பொருள் சேர்க்க ஆசை உண்டாகும் போது அதனால் வரும் துன்பத்தினை நினைத்துப் பார்க்க அந்த ஆசை மறையுமென்றார். )
======================================================
   
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.  - 117

தி.பொ.ச. உரை: நேர்மையான முறையில் நல்லதை மட்டுமே செய்கின்ற ஒருவரின் எளிமையான வாழ்வினைக் கண்டு ' அவர் வறுமையுற்றார் ' என்று உலகம் இகழாது. ( பொதுவாக நேர்மையானவர்கள் வாழ்க்கையில் அதிகப் பொருள் சேர்க்க இயலாது. இதனால் அவர்கள் எளிமையாகவே வாழ்வர். இதை வறுமை நிலை என்று இகழாமல் உயர்ந்த நிலையாகவே உலகம் போற்றும் என்கிறார். காரணம், இந்த எளிய வாழ்க்கை முறை தான் அவர்கள் நேர்மையானவராய் வாழ உதவி செய்கிறது. நெஞ்சத்தில் ஆடம்பரம் தலைதூக்கிவிட்டால் நேர்மையாக வாழ்வது கேள்விக்குறி ஆகிவிடுமன்றோ!. தாழ்வு = அடக்கம், பணிவு, எளிமை. கெடு = வறுமை. அகராதி காண்க. )
=======================================================

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.  -  118

தி.பொ.ச. உரை: ஒருபொருளின் நிறைகாணும் பொழுது சமநிலையில் இருக்கவல்ல பண்பே ஒரு துலாக்கோலுக்குப் பெருமை தருகிறது. அதைப்போல ஒரு சான்றோரின் நிறைகாணும் பொழுது அவரது நேர்மையாய் இருக்கவல்ல பண்பே அவருக்குப் பெருமையைத் தருகிறது.
=======================================================
   
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.  - 119

தி.பொ.ச. உரை: மாறுபாடற்ற சொற்களே ஒருவரது நேர்மையைக் காட்டிவிடும். ஏனென்றால் அவரது நேர்மையான நெஞ்சத்தின் வெளிப்பாடே அவை. ( அதாவது ஒருவரின் உள்ளத்தில் நேர்மை இல்லாவிட்டால் அது அவரது சொல்லின் மூலம் கண்டிப்பாக வெளிப்பட்டு விடும் என்கிறார். இதை வைத்து அவரது நம்பகத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார். கோட்டம் = மாறுபாடு, விலகல். )
=====================================================
   
வாணிகம் செய்வார்க்கு வாணிகன் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.  - 120

தி.பொ.ச. உரை: பொருள் வாங்குவோர்க்குத் துலாக்கோலால் எடைபோட்டுக் கொடுப்பதில் மட்டுமே நேர்மை என்றில்லாமல் (அப் பொருளுடன் தொடர்புடைய) பிறவற்றிலும் நேர்மையினையே கடைப்பிடிக்க வேண்டும். ( இங்கு பொருளுடன் தொடர்புடைய பிற என்பது பொருளின் தரம், பொருளின் விலை போன்றவையாம். சரியாக எடைபோட்டுக் கொடுத்தால் மட்டும் நேர்மை ஆகாது; ஆளைப்பார்த்து விலை சொல்வதும், பொருளின் தரத்தை மாற்றுவதும் நேர்மையான செயலன்று என்கிறார். வாணிகம் = வியாபாரம். வாணிகன் = துலாக்கோல். வாணிகன் பேணுதல் = துலாக்கோலை சரியாக நிறுத்தல். அகராதி காண்க. )
===================== வாழ்க தமிழ்! ===================== 

Wednesday, October 23, 2013

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.  - 101

தி.பொ.ச. உரை: (தான் முன்பு ஒருபோதும்) உதவியிராதபொழுதும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த பூமி செய்யும் உதவியும் பசு செய்யும் உதவியும் ஒப்பாக முடியாது. (இது எவ்வாறென்றால், வெயிலில் காய்ந்து கிடக்கும் பூமி கூட உழுது வித்தி நீர் பாய்ச்சி குளிர்வித்து உதவினால் தான் நமக்கு விளைச்சலைத் தருகிறது. அதைப்போல பசுவும் புல்லைக் கொடுத்தால் தான் நமக்குப் பாலே தருகிறது. வானகம் = வான் +அகம் = பால் + உடையது = பசு. அகராதி காண்க.)
===========================================================

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  - 102

தி.பொ.ச. உரை: துன்புறும் காலத்திலே ஒருவர் நமக்குச் செய்யும் உதவி மிகச் சிறிதாகவே இருந்தாலும் உண்மையில் அவ் உதவியானது இந்த உலகத்தை விட மிகப் பெரியதே ஆகும். ( இது எவ்வாறென்றால், மழையற்ற வறட்சிக் காலத்தில் நாம் உணவின்றித் துன்புறும் போது அந்த பூமி கூட நமக்கு விளைச்சலைத் தந்து உதவுதில்லை. அப்போது நமக்கு உணவளித்து நம் உயிரைக் காப்பவர் பூமியினும் பெரியவர் அன்றோ!)
===========================================================

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.  - 103

தி.பொ.ச. உரை: கைம்மாறு கருதாமல் ஒருவர் செய்யும் உதவியினை சீர்தூக்கிப் பார்த்தால் அதன் நன்மையானது இந்தக் கடலை விட பெரியதாகும். ( இதற்கு சான்றாக மேகங்களைக் கூறலாம். கடலில் இருந்து ஆவியாகி மேலே போன மேகங்கள் நன்றிக்கடனாக கடலுக்கு மட்டுமே மழைநீரைப் பொழிவதில்லை. கடல் சூழ்ந்த நிலத்திற்கும் கைம்மாறு கருதாமல் மழைநீரைத் தந்து உதவுகிறது.)
============================================================

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.   - 104

தி.பொ.ச. உரை: ஒருவர் செய்த உதவியானது தினைபோல (குறுகியகாலப்) பயன் தருவதேயாயினும் அதன் பயனை அனுபவித்தவர்கள் உதவி செய்தவருக்கு பனைமரம் போல (பல்லாண்டு காலம்) நன்றி உடையவராய் இருக்க வேண்டும். ( ஒருவர் கொடுத்த உதவிப் பொருளானது தினைப்பயிர் போல குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை செய்தாலும் நன்மை தரும் அக்காலம் முடிந்ததும் நமக்கு உதவி செய்தவரை உடனே மறந்துவிடல் ஆகாது; அவர் செய்த உதவியை ஒரு பனைமரத்தின் ஆயுட்காலம் போல பல்லாண்டு காலம் நினைவில் கொண்டு அவருக்கு நன்றி உடையவராய் இருக்க வேண்டும் என்கிறார். )
============================================================

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.  - 105

தி.பொ.ச. உரை: ஒருவருக்கு நாம் செய்யும் உதவியின் பெருமையானது நாம் கொடுத்து உதவும் பொருளின் அளவினைப் பொறுத்து அமையாமல் அவ் உதவியைப் பெற்றோரின் மனநிறைவினைப் பொறுத்து அமைவதாகும். ( ஒருவருக்கு நாம் எவ்வளவு பெரிய உதவிகளை செய்தாலும் அவற்றால் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லையெனில் அவ் உதவிகள் அளவால் பெரியதாய் இருந்தாலும் பயனால் மிகச் சிறியவையே என்கிறார். பல்வேறு உதவிகளில் பசிக்கு உணவிடும் உதவி ஒன்றே உதவியைப் பெற்றவருக்கு போதும் என்ற மனநிறைவினைத் தருவதினால் தான் விருந்தோம்பல் தலையாய உதவியாகக் கருதப்பட்டது. சாலுதல் = நிறைதல். சால்பு = நிறைவு, திருப்தி. அகராதி காண்க.)
============================================================

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.   -  106

தி.பொ.ச. உரை: துன்புற்ற காலத்திலே துணையாய் இருந்து நமக்கு உதவி செய்தோரின் நட்பினை நாம் கைவிடலாகாது; நல்லவர்களான அவர்களின் உறவினை நாம் மறந்துவிடவும் கூடாது. ( இங்கு நட்பினைக் கைவிடுதல் அல்லது துறத்தல் ஆகாது என்பது அவர்க்கு ஒரு துன்பம் நேர்ந்துழி நாம் முன்சென்று உதவ வேண்டும் என்பதாம். மறத்தலாகாது என்பது அவர்களையும் அவர் செய்த உதவியினையும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாம். )
=============================================================

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. - 107

தி.பொ.ச. உரை: துன்புற்ற காலத்திலே தமது துன்பம் தீர்த்து உதவியவரின் நட்பினை எழுகின்ற நாள்தோறும் எண்ணிப் பார்க்க வேண்டும். ( 104 ஆம் குறளில் உதவியோரின் நட்பினை எவ்வளவு காலம் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியவர் இக் குறளில் எப்படி அதை நினைவில் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார். துயில் நீங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒரு பிறப்பே என்பதால் இங்கு எழுபிறப்பு என்பது நாள்தோறும் என்ற பொருளைத் தரும். இதனை இன்னும் விளக்கும் வகையான் இதற்கு 'எழுமை' என்று அடை கொடுத்து விளக்கினார் என்க. நாள்தோறும் நினைக்காவிட்டால் உதவியையும் உதவி செய்தோரையும் காலப்போக்கில் மறந்துபோய் விடுகின்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு கூறினார்.)
=============================================================

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.  -  108

தி.பொ.ச. உரை: ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது. அப்படி அவர் உதவி செய்தபோது தவிர்க்க முடியாமல் நமக்குச் செய்த துன்பத்தை நினைக்கக் கூடாது. ( இதற்குச் சான்றாக விருந்தோம்பலைக் கொள்ளலாம். வந்த விருந்தினர்களுக்கு உணவளித்து அனுப்பும்பொழுது காத்திருக்கச் செய்தல் என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதல்லவா. காத்திருக்கும் இந்த நேரத்தில் பசியினால் விருந்தினர்கள் துன்பமடைவார்கள் தானே. பசியாறிய பின்னர் அத் துன்பத்தை அவர்கள் மறந்துவிட்டு விருந்தளித்த நன்றியினை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார். சரி, எப்படி ஒருவர் செய்த துன்பத்தை மறப்பது?. இதற்கான வழிமுறையினை அடுத்த குறளில் கூறுகிறார். )
=============================================================
  
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.  -  109

தி.பொ.ச. உரை: உயிரையே வேரறுப்பது போன்றதோர் கொடிய துன்பத்தை ஒருவர் நமக்கு அளித்தபோதும் அவர் நமக்கு செய்த ஒரு நன்மையினை நாம் நினைத்த அளவில் அத் துன்பம் மறையும். ( இதற்கும் சான்றாக விருந்தோம்பலையே கொள்ளலாம். கடும்பசி என்பது உயிரை வேரறுப்பதை ஒத்த கொடிய துன்பம் என்பதை நாம் அறிவோம். உணவுக்காக காத்திருக்கும்போழுது இத் துன்பம் இன்னும் பெருகி நம் உயிரை வாட்டும். விருந்தளிப்பவர் மீது கடும் சினத்தை ஏற்படுத்தும். ஆனால் பசியாறியவுடன் நாம் அவர் மீது சினம் கொள்கிறாமோ? இல்லை. ஏனென்றால் அவர் செய்த நன்மையினை அதாவது விருந்துணவின் சுவையினை நினைத்த மாத்திரத்தில் அச் சினமெல்லாம் போய்விடுகிறதன்றோ!. )
===============================================================

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.   -  110

தி.பொ.ச. உரை: (கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற) கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட ஒருவன் அக் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து சில நேரங்களில் தப்பிவிடலாம். ஆனால், தனக்கு நன்மை செய்த ஒருவரிடத்திலே நன்றியை மறந்து குற்றமிழைத்தால், அக் குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பவே முடியாது. ( இதற்கு சான்றாக ஆற்றினை எடுத்துக் கொள்ளலாம். ஆற்றில் நீர் உள்ளபோது குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் அது உதவுகிறது. அதே ஆற்றில் நீர் வற்றியதும் அதன் மணலையே அள்ளிச்சென்று கட்டடங்கள் கட்டுகிறோம். இச்செயல் ஆற்றுக்கு நாம் செய்யும் தீங்காகும். ஏனென்றால் அந்த மணல் தான் ஆற்றின் போக்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் உதவுகிறது. ஆற்றில் மறுமுறை நீர் வரும்போது மணல் குறைபாட்டினால் வெள்ளம் ஏற்பட்டு அது அருகில் இருக்கும் குடியிருப்புக்கள் மற்றும் வயல்களில் புகுந்து அழித்து விடுகிறது. இக் குறளுக்கு இன்னொரு சான்றாகக் காற்றினையும் கொள்ளலாம். காற்றானது நமக்கு உயிர்வாழத் தேவையான உயிர்வளியினைத் தந்தும் நமது உணவுப் பொருளைத் தயாரிக்கும் தாவரங்களுக்கு கரியமில வாயுவினைத் தந்தும் உதவுகிறது. ஆனால் நாம் அக் காற்று செய்த நன்றியினை மறந்து அதனை மாசுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். இந்த நன்றி கெட்ட செயலின் பலன்?. ஓசோனில் ஓட்டை, அமில மழை, புவி வெப்பமயம், துருவப் பனி உருக்கம் போன்ற இயற்கை சீரழிவுகளால் மனித இனம் மென்மெல அழிந்து வருகிறது. இந்த அழிவில் இருந்து உய்ய வேண்டுமென்றால், ஆற்றிற்கும் காற்றிற்கும் நன்மை செய்கிறோமோ இல்லையோ இனியேனும் இதுபோன்ற நன்றி கெட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக.! )
===================== வாழ்க தமிழ்!===========================