Saturday, December 15, 2012

இனியவை கூறல்


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   -   91

தி.பொ.ச.உரை: செம்பொருளாகிய அறத்தின் தன்மைகளைத் தெளிவாக அறிந்தவர்கள்  தீங்கில்லாத அறக் கருத்துக்களையே பேசுமிடத்தும் அன்பு கலந்து இனிமையாகவே கூறுவர்.
==========================================================

அகன்அமர்ந்து ஈதலில் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.  - 92

தி.பொ.ச.உரை: இல்லத்திற்குள் அழைத்து அமரவைத்து உணவிடுவதற்கு தன்னிடத்திலே ஒரு பொருளுமில்லை ஆயினும் தம் இல்லத்தின் முன்னால் இருந்துகொண்டு வரும் விருந்தினர்களின் மனம் கோணாதவாறு முகமலர்ந்து இனிமையாகப் பேசி வழியனுப்புவதும் நற்செயலே ஆகும்.
==========================================================

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். - 93

தி.பொ.ச.உரை: (விருந்தினர்களிடத்தில்) முகம் மலர்ந்து கருணையோடு பார்ப்பதும் அகம் மலர்ந்து அன்பொழுக இனிய சொற்களைப் பேசுவதும் அறச்செயலே ஆகும். ( இன்சொலினதும் என்பதற்குப் பதிலாக இன்சொலினதே என்று வந்துள்ளது.)
=========================================================

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  - 94

தி.பொ.ச. உரை: யாவர்க்கும் இன்பம் தரும் இனிய சொற்களையே எப்போதும் பேசி வாழ்வோரின் வாழ்க்கையில் துன்பம் தருவதான வறுமை என்பது வருவதில்லை. ( துவ்வாமை என்பதற்கு அனுபவமின்மை (நுகராமை), வேண்டாமை, வறுமை என்ற பொருட்கள் உண்டு. இவற்றுள் துன்பம் தரும் இயல்புடையது வறுமை மட்டுமே. அதனான் துன்புறூஉம் துவ்வாமை என்பது ஈண்டு வறுமையையே குறித்தது என்க. தாம் மட்டும் மகிழாது தம்மை அண்டி வரும் அனைவரையும் மகிழ்விக்கும் பண்பினால் இம் மக்கள் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழ்வார்கள் என்கிறார் வள்ளுவர்.)
========================================================

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.      -  95

தி.பொ.ச. உரை: நுகர்பொருள் அனைத்தும் உடையவனாய் ஒருவன் இருந்தாலும் அவனுக்குப் பெருமையும் புகழும் சேர்ப்பது அவனது இனிமையாகப் பேசும் பண்பே ஒழிய வேறில்லை. ( இக் குறளில் வரும் பணி என்பது நுகர்பொருளைக் குறிக்கும்.)
========================================================

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.    -  96

தி.பொ.ச. உரை: நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து இனிமையாகப் பேசிப் பழகி வந்தால் மனதிலுள்ள அறியாமை அழிந்து நல்லறிவு உண்டாகும். ( இன்சொல் பேசுவதால் உண்டாகும் பயன் இதனானும் உணர்த்தப்பட்டது.)
=======================================================

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   -  97

தி.பொ.ச.உரை: பிறரிடத்து இனிமையுடன் பேசப்படும் சொற்கள் அவருடனான உறவினை மேம்படுத்துவதுடன் அவருக்கு நன்மையினையும் அளித்து அதனால் தமக்கு செய்ந்நன்றியினையும் அளிக்க வல்லதாம். ( இக்குறளில் வரும் நயன் என்பது உறவினையும் நன்றி என்பது செய்ந்நன்றியினையும் குறிக்கும்.)
======================================================

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.    -  98

தி.பொ.ச. உரை: வறுமை நிலையில் இருந்தாலும் ஒருவன் குற்றம் நீங்கிய இனிய சொற்களை பேசிவந்தால் அவனது இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் இன்பம் உண்டாகும். ( இங்கு சிறுமை என்பது வறுமையினைக் குறிக்கும். இம்மை என்பது பிறப்பு முதல் 60 ஆண்டுகள் வரையிலான இல்லற வாழ்க்கை. மறுமை என்பது 60 க்கு மேல் வாழும் துறவற வாழ்க்கை.)
======================================================

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.    -  99

தி.பொ.ச.உரை: இனிய சொற்களைப் பேசியபோது நன்மை விளைந்ததை நேரடியாகக் கண்டும் பின்பொரு சமயம் கொடிய சொற்களை ஒருவன் பேசுவது எதனாலோ?.
======================================================

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காழ்கவர்ந் தற்று.   -  100

தி.பொ.ச.உரை: இனிய சொற்கள் இருக்கும்போது அதைவிடுத்து கடுஞ்சொற்களை ஒருவன் பயன்படுத்தும் செயலானது பழுத்த இனிய பழத்தைத் தின்னாமல் அதனுள் இருக்கும் கசப்பான கடினமான கொட்டையினை தின்கின்ற அறிவற்ற செயலுக்கு ஒப்பாகும்.
(ஆய்வுக்கட்டுரை)
======================================================

Friday, August 31, 2012

விருந்தோம்பல்

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.   -   81

தி.பொ.ச.உரை: இல்லறத்தில் இருந்து பொருள் சேர்த்து வாழ்வதின் பயனானது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பசியாற்றுவதற்கே ஆகும். ( இங்கு வேளாண்மை என்பதனை பசியாற்றுதல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்.)
=====================================================

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   -  82

தி.பொ.ச. உரை: விருந்தினர்கள் வீட்டிற்கு வெளியே (பசியோடு) காத்திருக்க, பசியினால் தன் இன்னுயிர் போகாமல் காக்கின்ற சிறு உணவாக இருந்தாலும் அதைத் தான் மட்டும் உண்ண வேண்டாம். ( நெடுநாள் பசியினால் உயிர் போகும் தருவாயில் கிடைத்த சிறு உணவு ஆதலால் அதை சாவா மருந்து என்றார். தன் இன்னுயிரைக் காக்கின்ற சாவா மருந்தாக இருந்தாலும் அதையும் விருந்தினர்களுடன் பகிர்ந்தே உண்ண வேண்டும் என்கிறார்.)
=================================================

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.   - 83

தி.பொ.ச. உரை: நாள்தோறும் (தன் வீட்டிற்கு) வரும் விருந்தினர்களின் பசியாற்றுபவனின் இல்வாழ்க்கை துன்பம் வந்து கெட்டுப் போவதில்லை. ( இதற்கான காரணத்தை குறள் 85 ல் கூறுகிறார் வள்ளுவர்.)
=======================================================

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.    -  84

தி.பொ.ச. உரை: (வீட்டுக்கு வரும்) விருந்தினர்களை வீட்டு வாசலில் இருந்துகொண்டு  முகமலர்ச்சியுடன் தலைவன் வரவேற்க, அவனது இல்லத்தரசியோ வீட்டுக்குள் இருந்தவாறு உள்ளக் களிப்புடன் (உணவு பரிமாறி) நடந்துகொள்வாள். ( இதனால் விருந்தோம்பல் செய்யும் முறை கூறப்பட்டது. இங்கு, 'அகனமர்ந்து' என்பது 'வீட்டுக்குள் இருந்து' மற்றும் 'மனமகிழ்ந்து' என்ற இரண்டுவிதமான பொருட்களில் ஆளப்பட்டுள்ளது.  அதைப்போலவே ' முகனமர்ந்து' என்பது ' வீட்டு வாசலில் இருந்து' மற்றும் ' முகமலர்ந்து' என்ற இரண்டு பொருட்களில் ஆளப்பட்டுள்ளது.) ( ஆய்வுக் கட்டுரை)
====================================================

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்.   -  85

தி.பொ.ச. உரை: விருந்தினர்களின் பசியாற்றியது போக எஞ்சியதை உண்டு மகிழ்பவனின் விளைநிலத்தில் பயிர்கள் விளைவதற்கு நீர் பாய்ச்சவும் வேண்டுமோ? (தேவையில்லை என்கிறார் வள்ளுவர். காரணம் நெஞ்சில் ஈரம் உள்ள இம் மக்களின் வயலிலும் ஈரப்பசை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால். இக் காரணத்தால் தான் இம் மக்களது வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் ஒருபோதும் அழிந்து போகாது என்று  குறள் 83 ல் கூறினார் என்க.) ( ஆய்வுக் கட்டுரை)
======================================================

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு.   - 86

தி.பொ.ச. உரை: செல்லும் விருந்தினர்களை ( 'இன்னும் சில நாட்கள் தங்கிச் செல்க' எனக் கூறித்) தடுப்பவனும் தாம் உணவு உண்ணும் முன் புதிதாக வரக்கூடிய விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனும் ஆகிய ஒருவனுக்கு பசுக்கள் எந்நேரத்திலும் பால் தரும். ( காரணம், மனிதரின் குணநலன்களை உணரவல்ல ஆற்றல் பசுக்களுக்கு உண்டு என்பதால். இங்கு வானத்தவர் என்று வள்ளுவர் பசுக்களையே சுட்டுகிறார். அமிர்தம் ஆகிய பாலை உடையதால் வானத்தவர் என்றும் வானோர் என்றும் வானுறையும் தெய்வம் என்றும் பசுக்களுக்குப் பெயருண்டு. விருந்தோம்பலில் சிறந்த வீட்டில் இருக்கும் பசுக்கள் கூட எந்த நேரத்திலும் அகமகிழ்ந்து பால் தரும் என்பது இதனான் உணர்த்தப்பட்டது. )  ( ஆய்வுக் கட்டுரை)   
======================================================

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.    -  87

தி.பொ.ச. உரை: விருந்தோம்பலின் பயன் இவ்வளவுதான் என்று அறுதியிட முடியாது. பசியாறிய விருந்தினர் அடையும் மகிழ்ச்சியின் அளவே அதன் அளவாகும். ( இங்கு ' வேள்வி' என்ற சொல்லின் மூலம் வள்ளுவர் 'பசியாற்றும்' செயலையே குறிப்பிடுகிறார். எப்படி யாக குண்டத்தில் வளர்க்கப்படும் தீக்கு உணவாக பல பொருட்கள் இடப்படுகிறதோ அதைப்போல வயிற்றில் வளரும் பசித்தீக்கு உணவு அளிக்கப்படுவதால் பசியாற்றுதலையும் 'வேள்வி' என்றார் என்க.)
======================================================

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.   -    88

தி.பொ.ச. உரை: (இல்லம் நாடிவரும்) விருந்தினர்களின் பசியாற்றுதலைச் செய்யாமல் உணவுப்பொருளைச்  சேமித்துவைப்போர்  (அதை இழக்குமிடத்து) எந்த ஆதரவுமின்றி வருந்துவர். ( நெஞ்சில் ஈரமற்ற இத்தகைய மக்களின் விளைநிலத்திலும் விளைச்சல் குன்றிப்போவதால் உணவின்றியும் பிறருடைய உதவியின்றியும் துன்புறுவர் என்றார்.)
======================================================

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.  -  89

தி.பொ.ச. உரை: மிகுதியான உணவுப்பொருள் இருந்தும் 'இல்லை' என்று கூறி விருந்தினரின் பசியாற்றாதவர்கள், கற்றிருப்பினும் அறிவில்லாத மூடர்களே ஆவர். ( காரணம், இப்படிச் சேமித்து வைத்து அப்பொருளை இழந்தக்கால் அவர்கள் ஆதரவின்றி வருந்த நேரிடும் என்பதனை முன்னரே அறியாமையால். )
======================================================

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.    -   90

தி.பொ.ச. உரை: (செடியில் பூத்திருக்கும்) அனிச்ச மலரானது அதனருகில் சென்று அதனை மோந்து பார்த்தால் தான் வாடும். ஆனால் விருந்தினர்களோ இல்லத்தார் கண்களில் தோன்றும் வெறுப்பினைத் தூரத்தில் கண்டே வருந்திச் சென்றுவிடுவர். ( எனவே விருந்தினர்களை இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்கிறார். அனிச்ச மலரைக் காட்டிலும் விருந்தினர் மென்மையானவர் என்பது இதனான் உணர்த்தப்பட்டது.) (ஆய்வுக் கட்டுரை)
====================================================

Wednesday, August 29, 2012

அடக்கமுடைமை

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.  -  121

தி.பொ.ச. உரை: அடக்கமானது அனைவரும் விரும்பத்தக்க முகப்பொலிவைத் தரும். அடங்காமல் சினம் கொள்வது முகத்திற்கு இருளையே தரும். (இங்கு அமரருள் = அமர்+அருள்= விரும்பத்தக்க முகப்பொலிவு. எதையும் தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டு பொறுமையாக புன்சிரிப்புடன் இருப்போர் முகம் பொலிந்து காணப்படும். எதற்கெடுத்தாலும் அடக்கமின்றி சினம் கொள்வோரின் முகம் இருண்டு கருமையாகக் காணப்படும் என்றார்.)
===============================================

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.   -  122

தி.பொ.ச. உரை: அடக்கத்தை விட ஒருவருக்கு உயர்வினைத் தரக்கூடிய செல்வம் வேறொன்றில்லை என்பதால் அந்த செல்வத்தை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் (கைவிடாமல்) போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
====================================================

    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.    - 123

தி.பொ.ச. உரை: அறச்செயல்கள் இவை என அறிந்து அறநெறிப்படி செய்தாலும் அவற்றையும் தன்னடக்கத்துடன் செய்வதே ஒருவனுக்கு நன்மையைத் தரும். ( காரணம், அடக்கமின்றி செய்யப்படும் அறச்செயல்கள் அகந்தையை உண்டாக்கி துன்பத்தைத் தந்து விடும்.)
===============================================

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.  -   124

தி.பொ.ச. உரை: தன்னுடைய இயல்பான நிலையினின்று மாறாமல் இருந்து மலைக்கு அடங்குவதைப் போல அதன் பின் சென்று மறைந்தாலும் கதிரவன் அந்த மலையைக் காட்டிலும் மிகப் பெரியதே ஆகும். அதைப்போல, தன்னுடைய இயல்பான நிலையினின்று இறுதிவரை வழுவாமல் பொறுமையுடன் அடங்கி இருப்பவன், தன்னை எதிர்த்து வாதிட்டு வருத்துபவனைக் காட்டிலும் உள்ளத்தால் மிக உயர்ந்தவனே ஆவான். ( இங்கு, மலை என்பது இரண்டு பொருட்களைக் குறிக்கும். ஒன்று மண்ணாலும் கல்லாலும் ஆனது. இன்னொன்று மலைதலாகிய வினையைச் செய்பவன். மலைதல் = வாதிட்டு வருத்துதல், எதிர்த்துப் பேசுதல்).
==============================================

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.    -   125

தி.பொ.ச. உரை: அடக்கமாகிய பண்பு பொதுவாக யாவருக்கும் நன்மையே செய்தாலும் செல்வந்தர்களுக்குப் பெருமையைத் தேடித் தருகின்ற ஒரே செல்வமாக இதுவே இருக்கிறது.  ( காரணம் சாதாரண மக்களைக் காட்டிலும் செல்வந்தர்கள் தான் தமது பண பலத்தாலும் செல்வாக்காலும் மிக எளிதில் அகந்தை கொண்டு விடுவர். எனவே இவர்களுக்குத் தான் அடக்கமானது மிகவும் பெருமையைத் தருவது என்றார்.)
===============================================

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து.   -  126

தி.பொ.ச. உரை: (துன்பம் வரும்போது) ஒரு ஓட்டுக்குள் தனது ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல (துன்பம் நேரும்பொழுது) தனது ஐம்புலன்களை அடக்கியாளத் தெரிந்தவனுக்கு ஒவ்வொரு நாளும் பாதுகாப்பானதே. ( இங்கு 'ஒருமை' என்று ஆமையின் ஓட்டினையும் 'எழுமை' என்று ஒவ்வொரு நாளையும் குறிப்பிடுகிறார். இதே போல 'எழுபிறப்பு' என்ற சொல்லின் மூலம் குறள் 62 லும் ஒவ்வொரு நாளையே குறித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. )
================================================

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.   -   127

தி.பொ.ச.உரை: (துன்பம் நேரும் போது) ஐம்புலன்களையும் அடக்க முடிகிறதோ இல்லையோ நாவினைக் கட்டாயம் அடக்கியாள வேண்டும். இல்லையேல் தவறாகப் பேசியமைக்காகப் பின்னர் வருந்த நேரிடும். ( ஒருவர் தவறாக நம்மிடத்தில் பேசும்போது அல்லது நடந்து கொள்ளும் போது அதன் எதிர்வினையாக முதலில் நாம் கையை ஓங்குவதில்லை. நமது வாய் தான் முந்துகிறது. எனவே தான் நாவை முதலில் அடக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.)
=================================================

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.      -   128

தி.பொ.ச. உரை: (துன்பம் நேரும் போது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நாவை அடக்காமல்) ஒரே ஒரு பொய் / குறளை / கடுஞ்சொல்லைக் கூறிவிட்டாலும் அதன் விளைவு நன்மையைத் தராது.
=================================================

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.    -   129

தி.பொ.ச. உரை: தீயினால் சுடப்பட்டது ஒருமுறை தான் என்பதால் அந்த புண் முழுதும் ஆறிவிடும். ஆனால் நாவினின்று வெளிப்பட்ட கடுஞ்சொற்கள் (கேட்டோரின் மனதுக்குள் இருந்துகொண்டு பலமுறையும்) சுட்டுக் கொண்டே இருப்பதால் அது ஆறாமல் வடுவாகி விடும்.
===================================================

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.   -  130

தி.பொ.ச. உரை: (எந்தச் சூழ்நிலையிலும்) சினம் எழாமல் தன்னைக் காத்துக் கொள்பவனும் கற்ற அறிவினால் அகந்தை கொள்ளாமல் அடங்கி இருப்பவனும் ஆகிய  ஒருவனைக் காண்பதற்காக அரசனே அவன் வரும் வழியில் விழிவைத்துக் காத்துக் கொண்டிருப்பான்.
==================================================

Saturday, August 18, 2012

அன்புடைமை

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.    -   71

தி.பொ.ச.உரை: அன்பை (மனதுக்குள்) அடைத்து வைக்கின்ற தாழ்ப்பாள் இவ் உலகில் இல்லை. ஏனென்றால் அன்புடையோரைக் காணுமிடத்து வெளிப்படும் கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தி விடும். ( என்பைத் தோலுக்குள் அடைத்து உடலென்று உலகில் உலவ விட்ட இறைவனுக்கு அன்பை அடைத்துவைக்கத் தெரியாதது கண்டு வியக்கிறார் வள்ளுவர்.)
=============================================
  
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.   - 72

தி.பொ.ச. உரை: எல்லாவற்றையும் தமக்கே சொந்தம் என்று கொண்டாடுபவர்கள் அன்பில்லாதவர்கள் ஆவர். கேட்டால் தனது உடல் எலும்பினைக் கூட பிறர்க்கு அளிக்க முன்வருபவர்களே அன்புடையோர் ஆவர்.
===================================================

    அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.  -  73

தி.பொ.ச. உரை: எப்படி உடலுக்கு எலும்பு ஆதாரமாக இருந்து செயல்படுகிறதோ அதைப்போல அன்பானது உயிருக்கு ஆதாரமாய் இருந்து செயல்படுகிறது.
===================================================

    அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு.  -  74

தி.பொ.ச. உரை: அன்பானது பிறர் மீது அக்கறையை ஏற்படுத்தும். இந்த அக்கறையானது நாளடைவில் நட்பாக மாறி அளவற்ற இன்பத்தைத் தரும்.
===============================================

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.   - 75

தி.பொ.ச.உரை: உயிர்களிடத்தில் காட்டப்படும் அன்பே உலகில் இன்பமும் புகழும் பெறுவதற்குக் காரணமாய் விளங்குகிறது என்று அறிஞர் கூறுவர்.
================================================

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.   -  76

தி.பொ.ச. உரை: அன்பானது அறச் செயல்களுக்கு மட்டுமே அடிப்படையாகும் என்று அறியாதோர் கூறுவர். (பல நேரங்களில்) வீரச்செயல்களுக்கும் அன்பே அடிப்படையாய் இருக்கிறது. ( அன்பானது கோழையைக் கூட வீரனாக்கும் என்று இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் வள்ளுவர்.)
================================================

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.    -  77

தி.பொ.ச. உரை: எலும்பில்லாத புழு வெயிலில் அகப்பட்டுத் துன்புறுவதைப் போல அன்பில்லாத அற்பர்கள் (அரசனுடைய) நீதியின் பிடியில் சிக்கித் துன்புறுவர்.
===================================================

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.    -   78

தி.பொ.ச. உரை:   உள்ளத்தில் அன்பு எனும் ஈரம் இல்லாதவருடைய உயிர் வாழ்க்கையானது பாலை நிலத்தில் நீரின் ஈரம் இல்லாமல் வற்றிப் போன ஒரு மரம் மீண்டும் தளிர்ப்பதைப் போன்றதாகும். (அதாவது பூமிக்குக் கீழே நீரின்றி வற்றிப்போன ஒரு மரம் பெய்த மழையால் சிறிது தளிர்த்தாலும் பாலைநிலத்தின் அகத்தே ஈரமின்மையால் விரைந்து உலர்ந்துவிடும். அதுபோல அகத்தில் சிறிதும் அன்பில்லாமல் புறத்தில் மட்டும் அன்புடையதுபோல நடப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருப்பதுபோலத் தோன்றினாலும் வெகு விரைவில் அது இல்லாது அழியும் என்றார்.) (ஆய்வுக் கட்டுரை)
=================================================

    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.    -  79

தி.பொ.ச. உரை: முகத்தின் புற உறுப்புக்களாகிய கண், காது, மூக்கு, வாய் போன்ற எல்லாம் ஒழுங்காய் அமைந்திருப்பினும்  அகத்தில் அன்பு இல்லாவிட்டால் அந்த முகத்தில் அழகு இருக்காது. 
================================================

    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.    -  80

தி.பொ.ச.உரை: உடலில் உயிர் நிலைபெற்றிருப்பதற்கு அன்பே காரணமாகும். அந்த அன்பில்லாதவர் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற ஒரு நடைபிணமே ஆவர். 
===============================================

Monday, August 13, 2012

புதல்வரைப் பெறுதல்

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.   -   61

தி.பொ.ச. உரை: மக்களின் பண்பட்ட அறிவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் மக்களால் பெற்றோர் அடையத்தக்க பெரும்பேறு வேறொன்றை யான் அறியேன்.
==================================================

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.      -   62

தி.பொ.ச. உரை: மக்கள் பண்புடையவராய் இருப்பின், பெற்றோருக்கு ஒரு நாளும் துன்பங்கள் இல்லை; பழிச்சொல்லும் இல்லை. ( குறள் எண் 339 ன் படி, உறங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளையும் வள்ளுவர் ஒரு பிறப்பாகக் கருதுவதால், இங்கு எழுபிறப்பு என்ற சொல்லின் மூலம் நாள்தோறும் என்ற பொருளைக் குறித்தார் என்க.)
==============================================

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.   -  63

தி.பொ.ச. உரை: தம் மக்களையே தமது செல்வங்கள் என்று கூறி மகிழ்வர் பெற்றோர். (ஆனால் அம் மக்கள் உண்மையிலேயே) அவர்களுக்குச் செல்வங்களாவது அம் மக்கள் செய்யும் செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. 
==============================================

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.      -  64

தி.பொ.ச. உரை: மக்கள் தமது கையினால் கொடுத்தது சிறிதளவு கூழானாலும் அது அமிர்தத்தினை விட மிகவும் இனிமையாக இருந்தது என்று மகிழ்வர் பெற்றோர்.
===============================================

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.    -  65

தி.பொ.ச. உரை: தம் உடலை மக்கள் தழுவும்போது இன்புறுவர் பெற்றோர். (தழுவியவாறே) மக்கள் பேசும்போது அதைக்கேட்டு இன்னும் மகிழ்வர் பெற்றோர். 
==============================================

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.   -   66

தி.பொ.ச. உரை: மக்கள் பேசும்போது அதைக்கேட்டு மகிழும் பெற்றோர் அது புல்லாங்குழலை விடவும் யாழினை விடவும் இனிமையானது என்பர்.
============================================

    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.   -  67

தி.பொ.ச.உரை: தந்தை தன் மக்கட்கு செய்யும் நற்செயல் யாதெனில், தன் மக்களை கல்விநிலையங்களில் (காலம் தாழ்த்தாமல்) முன்னரே சேர்த்து விடுதலாகும்.
==============================================

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   - 68

தி.பொ.ச. உரை: பெற்றோர், தம்மைக் காட்டிலும் தம் மக்களை கல்வியில் மேம்படச் செய்தலொன்றே உலக உயிர்கள் மகிழ்வுடன் வாழ வழிசெய்யும்.  
===============================================

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.   -  69

தி.பொ.ச. உரை: தன் மகனை முதன்முதலில் 'காணும்போது' மகிழ்கிறாள் தாய். அவனை அறிஞன் எனப் பிறர் கூறக் 'கேட்கும்போதோ' இன்னும் மகிழ்கிறாள் தாய்.
==================================================

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.    -   70

தி.பொ.ச. உரை: (தன்னைக் கல்வியறிவு பெறச்செய்த) தந்தைக்கு ஒரு மகன் உதவிசெய்ய விரும்பினால், ' இவனை மகனாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ' என்று பிறர் போற்றும் அளவுக்குப் பண்பட்ட அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். 
==================================================

Thursday, August 9, 2012

வாழ்க்கைத் துணைநலம்

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   -  51

தி.பொ.ச. உரை: புகுந்த வீட்டிற்கேற்ப தனது குணங்களை மாற்றிக்கொண்டு தனது கணவனின் வருமானத்திற்கேற்ப செலவு செய்பவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள். 
=====================================================

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.   -  52

தி.பொ.ச. உரை: இல்லறத்திற்கேற்ற சிறந்த பண்புகள் ஒருவனது மனைவியிடம் இல்லையானால், அவனது இல்வாழ்க்கை வேறு எவ்வகையிலும் சிறப்புடையது ஆகாது.
===================================================

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை?.  -  53

தி.பொ.ச. உரை: நல்ல மனைவி இருந்தால் வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் இருக்கும். இல்லாவிட்டால் அங்கு துன்பங்களே இருக்கும்.
================================================

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.   -  54

தி.பொ.ச. உரை: தனது இல்லறக் கடமைகளை அறநெறி வழுவாமல் செய்வதாகிய கற்பு எனப்படும் கொள்கையினைக் காட்டிலும் ஒரு மனைவிக்கு பெருமை சேர்ப்பது எது உள்ளது? ( எதுவுமில்லை)
=================================================

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யு மிழை.  -  55

தி.பொ.ச. உரை: பசுவினைக் கூட பேணாதவளாய் தனது கணவனையே பேணி (தனது கடமைகளைத்) தொடங்கும் மனைவியானவள் (கணவன் கொணர்ந்து தந்து) 'அணிக' என்று கூற அணிகலனை அணிந்துகொள்வாள்.'  (ஆய்வுக் கட்டுரை)
===================================================

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.  -  56

தி.பொ.ச. உரை: நாவடக்கத்தால் தன்னைக் காத்தல், தனது கணவனின் சொல்லைப் பேணுதல், தகைசான்ற பெரியோரின் அறிவுரைகளைக் காத்தல் ஆகிய இவற்றில் சிறிதும் தளராதவளே சிறந்த மனைவியாவாள்.
====================================================

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.   - 57

தி.பொ.ச. உரை: மனைவியானவள் தனது இல்லத்தைக் காவல் காப்பதைக் காட்டிலும் தனது உள்ளத்தை (ஆசைகளை)க் காவல் காப்பதே தலையாய செயலாகும்.
===================================================

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.   -  58

தி.பொ.ச. உரை: மனைவியானவள் தனது கற்புநெறியினால் புகழ் பெற்றால் அப்புகழினைக் கொண்டு பெருஞ்சிறப்புடையதாகக் கருதப்படும் புத்தேளிர் உலகினையே பெற முடியும்.
===================================================

    புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.     -  59

தி.பொ.ச. உரை: (கற்புநெறியால்) புகழ் சான்ற மனைவி இல்லாத ஒரு ஆண்மகன், (போரிலே) தனது பகைவர்களை, ஒரு ஆண்சிங்கத்தைப் போல கம்பீரத்துடன் எதிர்கொள்ளமுடியாது. ( இதனால் மனைமாட்சியற்ற மனைவியால் ஒரு ஆடவனின் நிம்மதி மட்டுமின்றி வீரமும் பாதிக்கப்படும் என்றார்.)
==================================================

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.   - 60

தி.பொ.ச. உரை:

மனைவியைத் தங்கம் என்று சொல்வார்கள். அந்த மனைவி மூலம் நல்ல குழந்தைகளை பெற்றுக் கொள்வது தங்கத்தில் நல்ல அணிகலன்களைச் செய்வதைப் போன்றதாகும்.
===============================================

Friday, August 3, 2012

இல்வாழ்க்கை

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.       - 41

தி.பொ.ச. உரை: மூன்றுவகைப்பட்ட இயல்புடையவர்க்கும் இல்லறத்தில் வாழ்பவனே நல்வழியில் நின்று காக்கின்ற துணையாவான். ( இந்த மூவர் யார் என்று அடுத்த குறளில் கூறுகிறார்.)
=================================================

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான்  என்பான் துணை.    -  42

தி.பொ.ச.உரை: மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்ற மூவகையினருக்கும் இல்லறத்தில் வாழ்பவனே காக்கின்ற துணையாவான். ( பெற்ற தாய்தந்தையரையும் உடன்பிறந்தோரையும் இன்னும் பலவற்றையும் துறந்து கணவனது இல்லமே கதியென வருவதால் இங்கு மனைவியை 'துறந்தார்' என்றார். அனுபவமற்றவரும் வலிமையற்றவருமான குழந்தைகளை 'துவ்வாதவர்' என்றார். இளமை கழிந்தோரும் அகவை மிக்கோருமாகிய தாய் தந்தையரை இறந்தார் என்றார்.)
================================================

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.    -  43

தி.பொ.ச.உரை: புலனின்பம் நீத்தார், பசு, விருந்தினர், சுற்றம், தனது குடும்பம் என்ற ஐவகையினரையும் அறநெறியின்படி பாதுகாப்பதே இல்வாழ்வானின் தலையாய கடமையாகும்.  ( ஆய்வுக் கட்டுரை)
===============================================

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

தி.பொ.ச. உரை: பழிக்கு அஞ்சி சேர்த்த பொருள் சிறிதாயினும் அதையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனுக்கு வாழ்வில் ஒரு குறைபாடும் ஒருபோதும் இருப்பதில்லை.
=====================================================

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.       -  45

தி.பொ.ச. உரை: அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகுவதே இல்வாழ்க்கையின் பண்பாகும். அறச் செயல்கள் புரிவதே இல்வாழ்க்கை பெற்ற பயனாகும். 
================================================

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்.     -  46

தி.பொ.ச.உரை:  அறநெறியின்படி இல்வாழ்க்கை நடத்தி இன்பம் பெறுதலைவிட பிறநெறியில் சென்று என்ன பெறமுடியும்?.
( ஒன்றும் பெற முடியாது .)
================================================

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.    -  47

தி.பொ.ச. உரை: அறநெறியின்படி பொருளீட்டி இல்வாழ்க்கை நடத்துபவன் எவனோ அவனே பிறநெறியில் சென்று பொருள் ஈட்டுவோரைவிட  தலைசிறந்தவனாவான்.
=====================================================

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.   -  48

தி.பொ.ச. உரை: அறநெறியில் இருந்து வழுவாமல் நடத்தப்படும் இல்லறமானது வலிமையானதாகக் கருதப்படும் துறவறத்தைக் காட்டிலும் வலிமை மிக்கதாகும்.
======================================================

    அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   - 49

தி.பொ.ச. உரை: அறம் என்று பொதுவாகக் கூறப்படுவது இல்லறமே ஆகும். இதில் பிறரால் வரும் பழி இல்லாதிருந்தால் அதுவே நல்லறமாகும்.  . .
========================================================

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.   -  50

தி.பொ.ச. உரை: இவ் உலகில் அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் அமிர்தமாகிய பாலுறையும் பசுவிற்கு ஒப்பாகக் கருதப்படுவான்.   ( ஆய்வுக் கட்டுரை)
=======================================================

Thursday, August 2, 2012

அறன் வலியுறுத்தல்

    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31

தி.பொ.ச. உரை: புகழையும் செல்வத்தையும் பயனாகத் தரும்போது அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறு என்ன நற்செயல் இருக்க முடியும்?.
==============================================

    அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32

தி.பொ.ச.உரை: அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு நற்செயல் வேறில்லை. அறம்செய்ய மறப்பதைக் காட்டிலும் ஒருவனுக்கு தீச்செயல் வேறில்லை.
==================================================

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல். - 33

தி.பொ.ச. உரை: தமக்குப் பொருத்தமான முறையில் செய்யத்தக்க இடங்களில் எல்லாம் அறச்செயலை தவிர்க்காமல் செய்க.
=================================================

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.   - 34

தி.பொ.ச. உரை: ஒருவன் தன் மனதளவில் களங்கமற்றவனாக இருப்பது அனைத்து அறத்திற்கும் இன்றியமையாதது. ஏனென்றால்  களங்கத்துடன் செய்யும் செயல்கள் எவையும் வெற்று ஆரவாரம் போன்றது. ( அறச்செயலைப் போல இவை புகழும் செல்வமும் தராது.)
===================================================

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.  -  35

தி.பொ.ச. உரை: பொறாமை, ஆசை, சினம், இழிசொல் ஆகிய நான்கினையும் தீயவை என்று அறம் கூறுகிறது.
================================================

    அன்றளிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

தி.பொ.ச. உரை: தமது தேவைக்கு மேல் பொருள் சேரும்போது பிறருக்குக் கொடுத்து உதவுவோம் என்று கருதாமல் இப்போதே அறம் செய்யுங்கள். சேர்த்த பொருள் செலவழிந்தாலும் செய்த உதவியானது அழியாமல் துணையாய் நின்று காக்கும்.
===============================================

    அறத்தாறு இதுவென வேண்டா செவிகைப்பப்
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

தி.பொ.ச.உரை: காதுகள் கசக்கும்படியான கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுத்திருப்பவனுக்கும் அவன் மேல்சென்ற (வன்சொற்களால் அடக்குமுறை புரிந்த) வனுக்கும் இடையே சென்று 'அறச்செயலே இது' எனக் கூறவேண்டா. (எவ்வகையானும் இது அறச்செயல் ஆகாது.)".   ( ஆய்வுக் கட்டுரை)
=====================================================

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் பழியடைக்கும் கல்.   -  38

தி.பொ.ச. உரை: (செய்யாது) ஒழிந்த நாள் தோன்றாவண்ணம் ஒருவன் அறஞ்செய்து வந்தால் அதுவே அவனது வாழ்நாளில் அவன்மீது பழியேதும் தோன்றாவண்ணம் (பாவக்குழியை) அடைத்துநிற்கும் கல்லாகும்.
=====================================================

    அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல. -  39

தி.பொ.ச. உரை: இன்பம் எனப்படுவதெல்லாம் அறச்செயல்களால் வருவதேயாகும். அறமற்ற செயல்களில் இன்பமோ புகழோ கிடைப்பதில்லை.
======================================================

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.   -  40

தி.பொ.ச. உரை: ஒருவன் செய்யத்தக்கதெல்லாம் ( புகழ், செல்வம், இன்பம் என்ற மூன்றையும் தருகின்ற) அறச்செயல்களேயாம். செய்யாமல் தவிர்க்க வேண்டியவையெல்லாம் பழியை மட்டுமே தருகின்ற அறமில்லாத செயல்களேயாம்.
=====================================================

Tuesday, July 31, 2012

நீத்தார் பெருமை

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.  - 21

தி.பொ.ச. உரை:  இவ் உலகில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறந்த பெரியோர்களின் பெருமையைச் சிறப்பிப்பதே அறநூல்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
=================================================

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  -  22

தி.பொ.ச. உரை: உலகியல் இன்பங்களைத் துறந்த பெரியோர்களின் பெருமை எவ்வளவு என்றால் இவ் உலகில் இறந்துபட்ட மாந்தர்களின் எண்ணிக்கை அளவேயாகும். ( அளவற்றது என்பதே பொருள்).
================================================

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.  - 23

தி.பொ.ச.உரை: இம்மை, மறுமை என்ற இரண்டின் தன்மை அறிந்து இவ் உலகில் அறம் செய்வோரின் பெருமையால் தான் இவ் உலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
================================================

    உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வறனென்னும் வைப்பிற்கோர் வித்து.  - 24

தி.பொ.ச. உரை: மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமன்
    ஐந்திரனே சாலுங் கரி.    -  25

தி.பொ.ச. உரை: ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
====================================================

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.    -  26

தி.பொ.ச. உரை: ஐம்புலன் வென்ற பெரியோரே செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவராம். அவரல்லாத சிறியோரால் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமுடியாது..
:====================================================

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.   -  27

தி.பொ.ச. உரை: சுவை, ஒளி, தொடுகை, ஒலி, மணம் என்ற ஐவகை புலனுணர்வுகள் செய்யும்  தந்திரங்களை ஆராய்ந்து அறியவல்லவனே இவ் உலகினைக் கட்டுப்படுத்த வல்லவன் ஆவான்.
====================================================

    நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து
    மறைமொழி காட்டி விடும்.  -  28

தி.பொ.ச. உரை: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காண்டல் அரிது.   -  29

தி.பொ.ச. உரை: குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும். ( ஆய்வுக் கட்டுரை)
=====================================================

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.    - 30

தி.பொ.ச. உரை: எல்லா மக்களிடத்திலும் வேறுபாடின்றி அன்பு பூண்டு பசியாற்றுவதால் தான் வேளாண் மக்களும் அறவோராகக் கருதப்படுகின்றனர். ( இக் குறள் இந்த அதிகாரத்தில் தவறாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இக் குறளின் பொருளே போதுமான சான்றாகும்.)
====================================================

Monday, July 30, 2012

வான்சிறப்பு

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

தி.பொ.ச. உரை:  உலக வாழ்க்கையானது மழையை நம்பியே இருப்பதால் அம் மழையே (உயிர்வாழத் தேவையான) அமிழ்தம் என்று அறியப்படுகிறது.
==============================================

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.  - 12

தி.பொ.ச. உரை: நுகர்வோருக்குத் தேவையான நல்ல உணவுப்பொருட்களை விளைவிக்கவும் அவருக்குத் தானே ஒரு உணவுப்பொருளாக இருக்கவும் வல்லது மழையாகும்.
=============================================

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.  - 13

தி.பொ.ச. உரை:  மேகம் (மழை பெய்யாது) பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இந்த பரந்த உலகெங்கும் பசியானது நிலையாக இருந்து உயிர்களை வாட்டி வதைக்கும்.
=============================================

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.  -  14

தி.பொ.ச. உரை:  மழை என்னும் நீரின் வளம் குறைபடுமானால் ஏர் கொண்டு உழமாட்டார் உழவர்.
===========================================

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.  - 15

தி.பொ.ச.உரை: (பெய்யாமல் பொய்த்து வறுமையில் உழல வைத்துக்) கெடுதல் செய்ய வல்லதும் கெட்டவர்க்கு ஆதரவாய் ஆங்கே பெய்து ( விளைச்சலைப் பெருக்கி அவரது பொருளாதாரத்தினை) உயர்த்துவதும் மழையே ஆகும்.
===========================================

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.  - 16

தி.பொ.ச. உரை: மழைத்துளி விழாவிட்டால் இந்த மண்ணில் பசும்புல்லின் தலையைக் கூடக் காண முடியாது. ( இனி பிற உயிர்களின் நிலையினைக் கூறவும் வேண்டுமோ?)
=========================================

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.  - 17

தி.பொ.ச. உரை: (கடலில் இருந்து ஆவியாகிச் சென்ற) மேகங்கள் தாம் அழிந்து மழையினை வழங்காவிடில் நெடிய கடலும் தனது நீர்வளத்தில் குன்றிப்போகும்.
=======================================

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   - 18

தி.பொ.ச. உரை: மேகங்கள் நீரின்றி வறண்டு போனால் இவ் உலகில் பசுக்களுக்கும் சிறப்பும் பூசனையும் நடவாது. ( ஆய்வுக் கட்டுரை)
=======================================

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.   -  19

தி.பொ.ச. உரை: மேகங்கள் மழையினை வழங்காவிட்டால் இந்த பரந்த உலக மக்களிடத்தில் கொடுத்து உதவும் குணமும் (தானம்) பொறுமையும் (தவம்) ஆகிய இரண்டு நற்பண்புகளும் தங்காது.
======================================

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.   -  20

தி.பொ.ச. உரை: யாராயினும் நேர்மை (வான்) இல்லாவிட்டால் ஒழுக்கம் என்பதில்லை. அதைப்போல மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இல்லை.
=====================================

Saturday, July 28, 2012

கடவுள் வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    யகவன் முதற்றே உலகு. -1

தி.பொ.ச.உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தினை முதலாகக் கொண்டுள்ளன. அதைப்போல இந்த உலகம் காரண அறிவாய் விளங்கும் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது.  ( ஆய்வுக் கட்டுரை )
========================================

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின். - 2

தி.பொ.ச. உரை: தூய அறிவினனான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தமது சிந்தையில் பேணாதவர்கள் என்ன கற்றிருந்தும் என்ன பயன்?. (ஒன்றுக்கும் உதவாது!)
=======================================

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். - 3

தி.பொ.ச. உரை: பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை மிக்க திருவடிகளைச் சேர்ந்தவர்கள் இப் புவியில் (புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர்.  (ஆய்வுக் கட்டுரை)
=====================================

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.   - 4

தி.பொ.ச.உரை:  விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கு எவ்விடத்தும் துன்பம் என்பதே இல்லை.
=====================================

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு.  - 5

தி.பொ.ச. உரை: இறைவனையே அடையக் கூடிய பொருளாகக் கொண்டு சரணடைந்தோரிடத்தில் இருளாகிய விதியினால் ஏற்படுகின்ற நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை. ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பொறிவாயில் அந்தணன்தாள் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.  - 6

தி.பொ.ச. உரை: உருவமும் பெயருமற்ற அந்தணனனாகிய இறைவனின் திருவடிகளைக் கள்ளமில்லாத ஒழுக்கத்துடன் பணிந்து நின்றவர்கள்  (இவ் உலகில் புகழால்) நெடுங்காலம் வாழ்ந்திருப்பர். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.- 7

தி.பொ.ச. உரை: தனக்கு ஒப்புமையில்லாத ஒருவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்குத் தமது மனக்கவலைகளை மாற்றிக் கொள்வது அரிதான செயலாகும்.
====================================

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.  - 8

தி.பொ.ச. உரை: அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவருக்கல்லால் பிறருக்கு பிறவி என்னும் ஆழக்குழியினைக் கடப்பது அரிதான செயலாகும். ( ஆய்வுக் கட்டுரை)
===================================

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.  - 9

தி.பொ.ச. உரை: எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத ஒரு தலைவனிடத்தில் வீரமும் பொருட்செல்வமும் இருந்தும் பயனில்லாமல் போகும். ( ஆய்வுக் கட்டுரை)
====================================

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.  -10

தி.பொ.ச. உரை: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரேயல்லால் பிறர் பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பது இயலாது.
=====================================