Friday, August 31, 2012

விருந்தோம்பல்

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.   -   81

தி.பொ.ச.உரை: இல்லறத்தில் இருந்து பொருள் சேர்த்து வாழ்வதின் பயனானது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பசியாற்றுவதற்கே ஆகும். ( இங்கு வேளாண்மை என்பதனை பசியாற்றுதல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர்.)
=====================================================

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   -  82

தி.பொ.ச. உரை: விருந்தினர்கள் வீட்டிற்கு வெளியே (பசியோடு) காத்திருக்க, பசியினால் தன் இன்னுயிர் போகாமல் காக்கின்ற சிறு உணவாக இருந்தாலும் அதைத் தான் மட்டும் உண்ண வேண்டாம். ( நெடுநாள் பசியினால் உயிர் போகும் தருவாயில் கிடைத்த சிறு உணவு ஆதலால் அதை சாவா மருந்து என்றார். தன் இன்னுயிரைக் காக்கின்ற சாவா மருந்தாக இருந்தாலும் அதையும் விருந்தினர்களுடன் பகிர்ந்தே உண்ண வேண்டும் என்கிறார்.)
=================================================

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.   - 83

தி.பொ.ச. உரை: நாள்தோறும் (தன் வீட்டிற்கு) வரும் விருந்தினர்களின் பசியாற்றுபவனின் இல்வாழ்க்கை துன்பம் வந்து கெட்டுப் போவதில்லை. ( இதற்கான காரணத்தை குறள் 85 ல் கூறுகிறார் வள்ளுவர்.)
=======================================================

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.    -  84

தி.பொ.ச. உரை: (வீட்டுக்கு வரும்) விருந்தினர்களை வீட்டு வாசலில் இருந்துகொண்டு  முகமலர்ச்சியுடன் தலைவன் வரவேற்க, அவனது இல்லத்தரசியோ வீட்டுக்குள் இருந்தவாறு உள்ளக் களிப்புடன் (உணவு பரிமாறி) நடந்துகொள்வாள். ( இதனால் விருந்தோம்பல் செய்யும் முறை கூறப்பட்டது. இங்கு, 'அகனமர்ந்து' என்பது 'வீட்டுக்குள் இருந்து' மற்றும் 'மனமகிழ்ந்து' என்ற இரண்டுவிதமான பொருட்களில் ஆளப்பட்டுள்ளது.  அதைப்போலவே ' முகனமர்ந்து' என்பது ' வீட்டு வாசலில் இருந்து' மற்றும் ' முகமலர்ந்து' என்ற இரண்டு பொருட்களில் ஆளப்பட்டுள்ளது.) ( ஆய்வுக் கட்டுரை)
====================================================

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்.   -  85

தி.பொ.ச. உரை: விருந்தினர்களின் பசியாற்றியது போக எஞ்சியதை உண்டு மகிழ்பவனின் விளைநிலத்தில் பயிர்கள் விளைவதற்கு நீர் பாய்ச்சவும் வேண்டுமோ? (தேவையில்லை என்கிறார் வள்ளுவர். காரணம் நெஞ்சில் ஈரம் உள்ள இம் மக்களின் வயலிலும் ஈரப்பசை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால். இக் காரணத்தால் தான் இம் மக்களது வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் ஒருபோதும் அழிந்து போகாது என்று  குறள் 83 ல் கூறினார் என்க.) ( ஆய்வுக் கட்டுரை)
======================================================

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு.   - 86

தி.பொ.ச. உரை: செல்லும் விருந்தினர்களை ( 'இன்னும் சில நாட்கள் தங்கிச் செல்க' எனக் கூறித்) தடுப்பவனும் தாம் உணவு உண்ணும் முன் புதிதாக வரக்கூடிய விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவனும் ஆகிய ஒருவனுக்கு பசுக்கள் எந்நேரத்திலும் பால் தரும். ( காரணம், மனிதரின் குணநலன்களை உணரவல்ல ஆற்றல் பசுக்களுக்கு உண்டு என்பதால். இங்கு வானத்தவர் என்று வள்ளுவர் பசுக்களையே சுட்டுகிறார். அமிர்தம் ஆகிய பாலை உடையதால் வானத்தவர் என்றும் வானோர் என்றும் வானுறையும் தெய்வம் என்றும் பசுக்களுக்குப் பெயருண்டு. விருந்தோம்பலில் சிறந்த வீட்டில் இருக்கும் பசுக்கள் கூட எந்த நேரத்திலும் அகமகிழ்ந்து பால் தரும் என்பது இதனான் உணர்த்தப்பட்டது. )  ( ஆய்வுக் கட்டுரை)   
======================================================

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.    -  87

தி.பொ.ச. உரை: விருந்தோம்பலின் பயன் இவ்வளவுதான் என்று அறுதியிட முடியாது. பசியாறிய விருந்தினர் அடையும் மகிழ்ச்சியின் அளவே அதன் அளவாகும். ( இங்கு ' வேள்வி' என்ற சொல்லின் மூலம் வள்ளுவர் 'பசியாற்றும்' செயலையே குறிப்பிடுகிறார். எப்படி யாக குண்டத்தில் வளர்க்கப்படும் தீக்கு உணவாக பல பொருட்கள் இடப்படுகிறதோ அதைப்போல வயிற்றில் வளரும் பசித்தீக்கு உணவு அளிக்கப்படுவதால் பசியாற்றுதலையும் 'வேள்வி' என்றார் என்க.)
======================================================

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.   -    88

தி.பொ.ச. உரை: (இல்லம் நாடிவரும்) விருந்தினர்களின் பசியாற்றுதலைச் செய்யாமல் உணவுப்பொருளைச்  சேமித்துவைப்போர்  (அதை இழக்குமிடத்து) எந்த ஆதரவுமின்றி வருந்துவர். ( நெஞ்சில் ஈரமற்ற இத்தகைய மக்களின் விளைநிலத்திலும் விளைச்சல் குன்றிப்போவதால் உணவின்றியும் பிறருடைய உதவியின்றியும் துன்புறுவர் என்றார்.)
======================================================

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.  -  89

தி.பொ.ச. உரை: மிகுதியான உணவுப்பொருள் இருந்தும் 'இல்லை' என்று கூறி விருந்தினரின் பசியாற்றாதவர்கள், கற்றிருப்பினும் அறிவில்லாத மூடர்களே ஆவர். ( காரணம், இப்படிச் சேமித்து வைத்து அப்பொருளை இழந்தக்கால் அவர்கள் ஆதரவின்றி வருந்த நேரிடும் என்பதனை முன்னரே அறியாமையால். )
======================================================

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.    -   90

தி.பொ.ச. உரை: (செடியில் பூத்திருக்கும்) அனிச்ச மலரானது அதனருகில் சென்று அதனை மோந்து பார்த்தால் தான் வாடும். ஆனால் விருந்தினர்களோ இல்லத்தார் கண்களில் தோன்றும் வெறுப்பினைத் தூரத்தில் கண்டே வருந்திச் சென்றுவிடுவர். ( எனவே விருந்தினர்களை இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்கிறார். அனிச்ச மலரைக் காட்டிலும் விருந்தினர் மென்மையானவர் என்பது இதனான் உணர்த்தப்பட்டது.) (ஆய்வுக் கட்டுரை)
====================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.