Monday, October 28, 2013

பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.  -  151

தி.பொ.ச. உரை: கொடிய ஆயுதங்களால் தன்னைக் குத்திக் குழிபறித்த போதும் ஒருவனைத் தாங்கி நிற்கும் பூமி போல கொடிய சொற்களால் தன்னை ஒருவன் தாக்கி வருத்தியபோதும் பதிலுக்கு அவனைத் தண்டிக்காமல் பொறுமை காப்பது தலைசிறந்த பண்பாகும். ( பூமியின் உதவியால் வாழ்கின்ற நாம் பூமியை வெட்டிக் காயப்படுத்தும் போதும் அது பொறுமையாய் இருந்து தனது உதவியைத் தொடர்ந்து செய்கிறது. அதைப்போல நாம் உதவிசெய்த ஒருவர் நம்மையே பதம் பார்க்கும்போதும் நாம் பொறுமைகாத்து அவ் உதவியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்கிறார். )
======================================================
   
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.  -  152

தி.பொ.ச. உரை: ஒருவர் வரம்புமீறி நடந்துகொண்டாலும் (அவரிடத்து சினம் கொள்ளாமல்) பொறுமையாய் இருப்பது நல்லது.  மேலும் அவரது செயலை நினைவில் கொள்ளாமல் மறந்து விடுவது அதைவிட நல்லது. ( காரணம், இவ்வாறு செய்வதன் மூலம் அவருக்கும் நமக்கும் பகை ஏற்படாமல் நட்பு உருவாகும் வாய்ப்புள்ளது என்பதால். )
=====================================================

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.  -  153

தி.பொ.ச. உரை: விருந்தினர்க்கு உணவளிக்க இயலாமையே மிகப் பெரிய வறுமையாகும். அதைப்போல மென்மையானவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்திருப்பதே மிகப் பெரிய வலிமையாகும். ( இங்கு மடவார் = மென்மையானவர்கள், அதாவது பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள். தம்மைவிட மென்மையான இவர்கள் தம்மிடத்து தவறுசெய்யும்பொழுது அவர்களைத் தண்டிப்பது பெரிய வலிமையாகாது. அவர்மீது சினம்கொள்ள முழு அதிகாரமிருந்தும் சினம் கொள்ளாமல் அவர்தம் தவறுகளைப் பொறுத்துச் செல்வதே மிகப் பெரிய வலிமையாகும் என்கிறார். )
===================================================
   
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.  -  154

தி.பொ.ச. உரை: தம்மிடத்துள்ள சிறந்த அறிவு தம்மைவிட்டு நீங்காதிருக்க விரும்பினால் ஒருவர் பொறுமையினையே தனது முதன்மை ஒழுக்கமாகக் கொண்டு செயல்புரிய வேண்டும். ( அதாவது ஒருவர் பொறுமை இழந்து சினம் கொள்ளும்பொழுது அவரது அறிவு தடுமாறி தனது பெருமைக்கு ஒவ்வாத செயலில் ஈடுபடத் துவங்குகிறார்.  இதைத்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுகின்றனர். இங்கு நிறை = அறிவு. அகராதி காண்க. )
==================================================

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.  -  155

தி.பொ.ச. உரை: துன்பங்களைப் பொறுக்காமல் சினம் கொண்டு தண்டிக்கும் பண்புடையவரை உலகத்தார் ஒருபொருளாகவே கருதமாட்டார். ஆனால் எவ்வளவு தீங்கு செய்தாலும் பொறுமை காக்கின்றவர்களைப் பொன்னாகப் பொதிந்துவைத்துப் போற்றுவர். ( இது எவ்வாறெனின், சூடேற்றும்பொழுது கொதிக்கின்ற தன்மையுடைய ஒரு நீர்மமானது சிறிது நேரத்தில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. ஆனால் எவ்வளவு சூடாக்கினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு ஒளிர்கின்ற பொன்னை மக்கள் விரும்பித் தம்முடன் பொதிந்துவைத்துக் கொண்டு போற்றுகின்றனர் அன்றோ.! )
=====================================================
   
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.  - 156

தி.பொ.ச. உரை: தெரிந்தே துன்பம் செய்தவருக்கு அந்த ஒருபொழுது வேண்டுமானால் இன்பம் தருவதாய் இருக்கலாம். ஆனால் அத் துன்பத்தைப் பொறுத்தவரோ இந்த உலகம் அழியும்வரை அழியாத புகழ் பெறுவர். ( இதற்கு சான்றாக காந்தியடிகளைக் காட்டலாம். காந்தியை சுட்டுக் கொன்றதன் மூலம் கோட்சே அந்த ஒருபொழுதில் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் தன்னை சுட்ட கோட்சேவை யாரும் தாக்காமல் பாதுகாத்து அவரை மன்னித்து விட்டதனால் மோகன்தாஸ் காந்தி இன்றுவரை மக்கள் உள்ளத்தில் மகாத்மா காந்தியாய் உயர்ந்து நிற்கிறார். இங்கு ஒறுத்தல் = வருத்துதல். நாள் = காலம், பொழுது. அகராதி காண்க. )
======================================================
  
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.  -  157

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற முறையிலே பிறர் நம்மிடத்தில் நடந்து கொண்டால் பொறுமை காக்க வேண்டுமே ஒழிய உள்ளம் அழிந்து நாமும் நேர்மையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.  ( இதனால் நேர்மையற்று நடந்து கொண்டவர் தனது தவறை உணர்வதற்கும் திருந்துவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார். அவ்வாறு அல்லாமல் பதிலுக்கு நாமும் நேர்மையற்று நடந்துகொண்டால் இருவருமே தவறு செய்தவர்களாவதுடன் சமுதாய ஒழுக்கமும் கட்டுப்பாடும் முற்றிலும் சிதையத் துவங்கி விடும். இங்கு திறன் = நேர்மை. நோதல் = சிதைதல், அழிதல். அகராதி காண்க. )
======================================================
   
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.  - 158

தி.பொ.ச. உரை: செருக்கினால் ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது யார் அதைப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு இருக்கின்றாரோ அவரே இறுதியில் வெற்றி பெற்றவராகிறார். ( இதற்கு சான்றாக பூமியைக் கூறலாம். பலவகைகளில் நமக்கு உதவியாய் இருக்கும் பூமியை நாம் குத்துகிறோம்; வெட்டுகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பூமிதான் இறுதியில் வெல்கிறது. ஆம், நம் வாழ்நாள் முடிந்ததும் அந்த பூமிக்குள் தான் நாம் அடங்கி விடுகிறோம். )
========================================================
   
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.  -  159

தி.பொ.ச. உரை: வரம்புமீறி பேசுபவர்களின் தீய சொற்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்போர் துறவிகளைக் காட்டிலும் மனவலிமை மிக்கவர்கள். ( துறவிகள் முற்றும் துறந்தவர்கள் ஆதலால் அவர்கள் சினத்தையும் துறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு சினமே எழாது. ஆனால் ஒரு இல்லறத்தோன் சினத்தை முழுவதும் துறவாத நிலையில் பொங்கிவரும் சினத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருப்பதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். அதனால் தான் இவ்வாறு கூறுகிறார். இங்கு தூய்மை = வலிமை. )
======================================================
   
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   -  160

தி.பொ.ச. உரை: பிறர் கூறுகின்ற கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுமையாக இருக்கின்றவர்கள் உண்ணாமல் நோன்பு இருப்போரைக் காட்டிலும் பெரியராம். ( காரணம், உண்ணா நோன்பு இருப்பதற்கு உடல்வலிமை போதும். ஆனால் இன்னாநோன்பு இருப்பதற்கு மனவலிமை தேவை. உடல்வலிமையைக் காட்டிலும் மனவலிமை மேலானது என்பதால் இவ்வாறு கூறுகிறார் வள்ளுவர். )
======================== வாழ்க தமிழ் ! ===================
   

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.