Friday, October 25, 2013

ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.  -  131

தி.பொ.ச. உரை: ஒழுக்கமானது (அதைப் பேணுபவருக்கும் பேணப்படுபவருக்கும்) நன்மையினைத்  தரக்கூடியது என்பதால் அவ் ஒழுக்கத்தினை அனைத்து உயிர்களிடத்திலும் தவறாமல் பேண வேண்டும். ( அதாவது ஒழுக்கத்துடன் நாம் ஒருவரிடத்தில் நடந்துகொண்டால் அவரும் ஒழுக்கத்துடனே நம்மிடத்தில் நடந்து கொள்வார். இதனான் இருவருக்கும் நன்மையே கிடைக்கும் என்றார். இங்கு ' உயிரினும் ' என்பது ' அனைத்து உயிரின்கண்ணும் ' என்ற பொருளில் வந்துள்ளது. )
=======================================================

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.  -  132

தி.பொ.ச. உரை: எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை விரும்பிப் பேணவேண்டும். ஏனென்றால் துணையாய் இருந்து நம் உயிரினைக் காப்பது அவ் ஒழுக்கமே என்பது சான்றோர் துணிபாகும்.
======================================================

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். - 133

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் உடையவனே குடிமகன் ஆவான். ஒழுக்கம் தவறி நடப்பவன் குடிமகனாகும் தன்மையினின்று இழிந்த கீழ்மகன் ஆவான். ( அதாவது தான் வாழும் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இதைச் செய்வதற்கு அவனுக்கு உதவியாய் இருப்பது அவனது ஒழுக்கமே ஆகும். இந்த ஒழுக்கத்தினின்று அவன் தவறும்பொழுது நாட்டில் குடிமகனாய் வாழும் தகுதியை இழந்து காட்டில் வாழும் விலங்கினையொத்த கீழ்மகன் ஆகின்றான். )
======================================================
   
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
சிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  - 134

தி.பொ.ச. உரை: (தனது துறைசார்ந்த அறிவினால் சிறப்பு பெற்ற) ஒரு ஆசிரியர் தனது துறைசார்ந்த அறிவை மறந்தாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ( அதனால் அவர் பெருமை குறையுமே தவிர முற்றும் அழியாது. ) ஆனால் அவர் தனது ஒழுக்கம் குன்ற அதாவது ஒழுக்கத்தை மறந்து நடப்பாராயின் அவரது பெருமை முற்றும் அழியும். ( இங்கு பார்ப்பான் என்று எந்த வருணத்தாரையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை என்று அறிக. துறை சார்ந்த அறிவில் சிறப்பு பெற்றவர்கள் அத் துறையின் மேற்பார்வையாளராக அல்லது ஆசிரியராக விளங்குவது இயல்பு. இங்கு பார்த்தல் = மேற்பார்வையிடுதல், மதிப்பிடுதல். அகராதி காண்க. இதனின்று பார்ப்பான் = மேற்பார்வையிடுபவன், மதிப்பிடுபவன், ஆசிரியன் என்றும் வரும். சிறப்பு என வருவது பாடபேதம். )
======================================================
   
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.  - 135
 
தி.பொ.ச. உரை: பொறாமை உடையவன் நல்ல செயல்களைச் செய்யமாட்டான். அதைப்போல ஒழுக்கமில்லாதவனும் பிறர் போற்றத்தக்க உயர்வான செயல்களைச் செய்ய மாட்டான். ( இதனான் பொறாமை கொள்பவனின் ஒழுக்கமும் கெடும் என்பதுடன் ஒருவர் மீது ஏற்படும் பொறாமையே நம் ஒழுக்கம் கெடப்போவதற்கான அறிகுறி என்பதும் பெறப்படுகிறது. )
=====================================================
   
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   -  136

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் தவறி நடத்தலால் வரும் கேட்டினை அறிந்து ஒருபோதும் ஒழுக்கத்தினின்று விலகாதிருப்பது உள்ளத்தில் ஊக்கமுடையவர்களின் பண்பாகும்.  ( இதனான் மனதில் உறுதி உள்ளவரை மட்டுமே ஒழுக்கம் தவறாமல் நடக்க இயலும் என்பதும் மனவலிமை குன்றும்போது ஒழுக்கம் மீறப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. ஏதம் = கேடு. உரவோர் = ஊக்கமுடையோர், மனவலிமையுடையோர். ஒல்குதல் = சாய்தல், விலகுதல். அகராதி காண்க. )
========================================================
   
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.  -  137

தி.பொ.ச. உரை: ஒழுக்கத்தைப் பேணி நடப்பவர்கள் என்றுமே நீங்காத மேன்மையினைப் பெறுவர். ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் என்றுமே நீங்காத பழியினைப் பெறுவர். ( எய்துதல் = பெறுதல், நீங்குதல். அகராதி காண்க. எய்துவர் = பெறுவர். எய்தா = நீங்காத. எய்தா என்பதனை மேன்மையுடனும் பழியுடனும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க. )
=====================================================

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.  - 138

தி.பொ.ச. உரை: நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. )
======================================================
   
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.  - 139

தி.பொ.ச. உரை: ஒழுக்கம் தவறாமல் நடப்பவர்கள் தவறியும் தீய சொற்களை உண்மையாகப் பேச மாட்டார்கள். அவர்களால் அப்படிப் பேசவும் முடியாது. ( இங்கு வாய் = உண்மை. வாயால் = உண்மையால் அதாவது உண்மையாக. வாயால் சொலல் = உண்மையாகப் பேசுதல் அதாவது சொல்லிய ஒரு பொய்யை உண்மையாக்க மேலும் மேலும் பல பொய்களைப் பேசுதல்.  பொய்மையும் வாய்மையிடத்த என்று ஏற்கெனவே வள்ளுவர் கூறியிருப்பதால் ஒழுக்கமானவர்களும் புரைதீர்ந்த நன்மை பயக்குமிடத்து பொய் பேசுவார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தாம் கூறிய அப் பொய்யினை உண்மையாக்க முயலமாட்டார்கள். காரணம், பொய்பேசிப் பழக்கமில்லை ஆதலால் அவர்களால் அதைச் செய்யவும் முடியாது என்கிறார். )
===================================================
   
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.  - 140

தி.பொ.ச. உரை: ஒழுக்கமிருந்தால் தான் உலகம் நம்முடன் ஒட்டும். ஒழுக்கமில்லாவிட்டால் உலகம் ஒட்டாது. இதை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடனே ஆவான். ( ஆம், ஒழுக்கத்துடன் நடந்து கொள்பவரை அனைவரும் விரும்பி அவருடன் பழகுவர். ஒழுக்கமின்றி நடந்து கொள்பவனைக் கண்டால் யாருக்கும் பிடிக்காது. யாரும் அவனை அண்டவும் மாட்டார்கள். இதனை அறியாதவன் என்ன கற்றிருந்தும் மூடன் தானே!. )
=================== வாழ்க தமிழ்!==========================
  

4 comments:

  1. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    “சி“றப்பொழுக்கங் குன்றக் கெடும். - 134
    என்று உள்ளது.

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான
    “பி“றப்பொழுக்கங் குன்றக் கெடும். - 134
    என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete
    Replies
    1. காளைராஜன் ஐயா, சிறப்பு என வருவது பாடபேதம் என்று கருத்துரையில் கூறியிருக்கிறேனே. கவனிக்கவில்லையா?. பிறப்பு என வருவது இக் குறளுக்குப் பொருந்தாது.

      அன்புடன்,
      தி.பொ.ச.

      Delete
  2. பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)மறப்பினும் ஓத்துக் கொளலாகும்
    ஓத்து என்பதன் பொருள் என்னவோ/

    ReplyDelete
  3. 'இந்தக் குறளுக்கு' என்று திருத்திப் படிக்கவும்.

    ReplyDelete

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.