Wednesday, October 23, 2013

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.  - 101

தி.பொ.ச. உரை: (தான் முன்பு ஒருபோதும்) உதவியிராதபொழுதும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த பூமி செய்யும் உதவியும் பசு செய்யும் உதவியும் ஒப்பாக முடியாது. (இது எவ்வாறென்றால், வெயிலில் காய்ந்து கிடக்கும் பூமி கூட உழுது வித்தி நீர் பாய்ச்சி குளிர்வித்து உதவினால் தான் நமக்கு விளைச்சலைத் தருகிறது. அதைப்போல பசுவும் புல்லைக் கொடுத்தால் தான் நமக்குப் பாலே தருகிறது. வானகம் = வான் +அகம் = பால் + உடையது = பசு. அகராதி காண்க.)
===========================================================

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  - 102

தி.பொ.ச. உரை: துன்புறும் காலத்திலே ஒருவர் நமக்குச் செய்யும் உதவி மிகச் சிறிதாகவே இருந்தாலும் உண்மையில் அவ் உதவியானது இந்த உலகத்தை விட மிகப் பெரியதே ஆகும். ( இது எவ்வாறென்றால், மழையற்ற வறட்சிக் காலத்தில் நாம் உணவின்றித் துன்புறும் போது அந்த பூமி கூட நமக்கு விளைச்சலைத் தந்து உதவுதில்லை. அப்போது நமக்கு உணவளித்து நம் உயிரைக் காப்பவர் பூமியினும் பெரியவர் அன்றோ!)
===========================================================

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.  - 103

தி.பொ.ச. உரை: கைம்மாறு கருதாமல் ஒருவர் செய்யும் உதவியினை சீர்தூக்கிப் பார்த்தால் அதன் நன்மையானது இந்தக் கடலை விட பெரியதாகும். ( இதற்கு சான்றாக மேகங்களைக் கூறலாம். கடலில் இருந்து ஆவியாகி மேலே போன மேகங்கள் நன்றிக்கடனாக கடலுக்கு மட்டுமே மழைநீரைப் பொழிவதில்லை. கடல் சூழ்ந்த நிலத்திற்கும் கைம்மாறு கருதாமல் மழைநீரைத் தந்து உதவுகிறது.)
============================================================

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.   - 104

தி.பொ.ச. உரை: ஒருவர் செய்த உதவியானது தினைபோல (குறுகியகாலப்) பயன் தருவதேயாயினும் அதன் பயனை அனுபவித்தவர்கள் உதவி செய்தவருக்கு பனைமரம் போல (பல்லாண்டு காலம்) நன்றி உடையவராய் இருக்க வேண்டும். ( ஒருவர் கொடுத்த உதவிப் பொருளானது தினைப்பயிர் போல குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை செய்தாலும் நன்மை தரும் அக்காலம் முடிந்ததும் நமக்கு உதவி செய்தவரை உடனே மறந்துவிடல் ஆகாது; அவர் செய்த உதவியை ஒரு பனைமரத்தின் ஆயுட்காலம் போல பல்லாண்டு காலம் நினைவில் கொண்டு அவருக்கு நன்றி உடையவராய் இருக்க வேண்டும் என்கிறார். )
============================================================

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.  - 105

தி.பொ.ச. உரை: ஒருவருக்கு நாம் செய்யும் உதவியின் பெருமையானது நாம் கொடுத்து உதவும் பொருளின் அளவினைப் பொறுத்து அமையாமல் அவ் உதவியைப் பெற்றோரின் மனநிறைவினைப் பொறுத்து அமைவதாகும். ( ஒருவருக்கு நாம் எவ்வளவு பெரிய உதவிகளை செய்தாலும் அவற்றால் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லையெனில் அவ் உதவிகள் அளவால் பெரியதாய் இருந்தாலும் பயனால் மிகச் சிறியவையே என்கிறார். பல்வேறு உதவிகளில் பசிக்கு உணவிடும் உதவி ஒன்றே உதவியைப் பெற்றவருக்கு போதும் என்ற மனநிறைவினைத் தருவதினால் தான் விருந்தோம்பல் தலையாய உதவியாகக் கருதப்பட்டது. சாலுதல் = நிறைதல். சால்பு = நிறைவு, திருப்தி. அகராதி காண்க.)
============================================================

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.   -  106

தி.பொ.ச. உரை: துன்புற்ற காலத்திலே துணையாய் இருந்து நமக்கு உதவி செய்தோரின் நட்பினை நாம் கைவிடலாகாது; நல்லவர்களான அவர்களின் உறவினை நாம் மறந்துவிடவும் கூடாது. ( இங்கு நட்பினைக் கைவிடுதல் அல்லது துறத்தல் ஆகாது என்பது அவர்க்கு ஒரு துன்பம் நேர்ந்துழி நாம் முன்சென்று உதவ வேண்டும் என்பதாம். மறத்தலாகாது என்பது அவர்களையும் அவர் செய்த உதவியினையும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாம். )
=============================================================

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. - 107

தி.பொ.ச. உரை: துன்புற்ற காலத்திலே தமது துன்பம் தீர்த்து உதவியவரின் நட்பினை எழுகின்ற நாள்தோறும் எண்ணிப் பார்க்க வேண்டும். ( 104 ஆம் குறளில் உதவியோரின் நட்பினை எவ்வளவு காலம் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியவர் இக் குறளில் எப்படி அதை நினைவில் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார். துயில் நீங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒரு பிறப்பே என்பதால் இங்கு எழுபிறப்பு என்பது நாள்தோறும் என்ற பொருளைத் தரும். இதனை இன்னும் விளக்கும் வகையான் இதற்கு 'எழுமை' என்று அடை கொடுத்து விளக்கினார் என்க. நாள்தோறும் நினைக்காவிட்டால் உதவியையும் உதவி செய்தோரையும் காலப்போக்கில் மறந்துபோய் விடுகின்ற வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு கூறினார்.)
=============================================================

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.  -  108

தி.பொ.ச. உரை: ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது. அப்படி அவர் உதவி செய்தபோது தவிர்க்க முடியாமல் நமக்குச் செய்த துன்பத்தை நினைக்கக் கூடாது. ( இதற்குச் சான்றாக விருந்தோம்பலைக் கொள்ளலாம். வந்த விருந்தினர்களுக்கு உணவளித்து அனுப்பும்பொழுது காத்திருக்கச் செய்தல் என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதல்லவா. காத்திருக்கும் இந்த நேரத்தில் பசியினால் விருந்தினர்கள் துன்பமடைவார்கள் தானே. பசியாறிய பின்னர் அத் துன்பத்தை அவர்கள் மறந்துவிட்டு விருந்தளித்த நன்றியினை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார். சரி, எப்படி ஒருவர் செய்த துன்பத்தை மறப்பது?. இதற்கான வழிமுறையினை அடுத்த குறளில் கூறுகிறார். )
=============================================================
  
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.  -  109

தி.பொ.ச. உரை: உயிரையே வேரறுப்பது போன்றதோர் கொடிய துன்பத்தை ஒருவர் நமக்கு அளித்தபோதும் அவர் நமக்கு செய்த ஒரு நன்மையினை நாம் நினைத்த அளவில் அத் துன்பம் மறையும். ( இதற்கும் சான்றாக விருந்தோம்பலையே கொள்ளலாம். கடும்பசி என்பது உயிரை வேரறுப்பதை ஒத்த கொடிய துன்பம் என்பதை நாம் அறிவோம். உணவுக்காக காத்திருக்கும்போழுது இத் துன்பம் இன்னும் பெருகி நம் உயிரை வாட்டும். விருந்தளிப்பவர் மீது கடும் சினத்தை ஏற்படுத்தும். ஆனால் பசியாறியவுடன் நாம் அவர் மீது சினம் கொள்கிறாமோ? இல்லை. ஏனென்றால் அவர் செய்த நன்மையினை அதாவது விருந்துணவின் சுவையினை நினைத்த மாத்திரத்தில் அச் சினமெல்லாம் போய்விடுகிறதன்றோ!. )
===============================================================

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.   -  110

தி.பொ.ச. உரை: (கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற) கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட ஒருவன் அக் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து சில நேரங்களில் தப்பிவிடலாம். ஆனால், தனக்கு நன்மை செய்த ஒருவரிடத்திலே நன்றியை மறந்து குற்றமிழைத்தால், அக் குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பவே முடியாது. ( இதற்கு சான்றாக ஆற்றினை எடுத்துக் கொள்ளலாம். ஆற்றில் நீர் உள்ளபோது குடிப்பதற்கும் வேளாண்மைக்கும் அது உதவுகிறது. அதே ஆற்றில் நீர் வற்றியதும் அதன் மணலையே அள்ளிச்சென்று கட்டடங்கள் கட்டுகிறோம். இச்செயல் ஆற்றுக்கு நாம் செய்யும் தீங்காகும். ஏனென்றால் அந்த மணல் தான் ஆற்றின் போக்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் உதவுகிறது. ஆற்றில் மறுமுறை நீர் வரும்போது மணல் குறைபாட்டினால் வெள்ளம் ஏற்பட்டு அது அருகில் இருக்கும் குடியிருப்புக்கள் மற்றும் வயல்களில் புகுந்து அழித்து விடுகிறது. இக் குறளுக்கு இன்னொரு சான்றாகக் காற்றினையும் கொள்ளலாம். காற்றானது நமக்கு உயிர்வாழத் தேவையான உயிர்வளியினைத் தந்தும் நமது உணவுப் பொருளைத் தயாரிக்கும் தாவரங்களுக்கு கரியமில வாயுவினைத் தந்தும் உதவுகிறது. ஆனால் நாம் அக் காற்று செய்த நன்றியினை மறந்து அதனை மாசுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். இந்த நன்றி கெட்ட செயலின் பலன்?. ஓசோனில் ஓட்டை, அமில மழை, புவி வெப்பமயம், துருவப் பனி உருக்கம் போன்ற இயற்கை சீரழிவுகளால் மனித இனம் மென்மெல அழிந்து வருகிறது. இந்த அழிவில் இருந்து உய்ய வேண்டுமென்றால், ஆற்றிற்கும் காற்றிற்கும் நன்மை செய்கிறோமோ இல்லையோ இனியேனும் இதுபோன்ற நன்றி கெட்ட செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக.! )
===================== வாழ்க தமிழ்!===========================

2 comments:

  1. செய் நன்றி
    எந்நன்றி?

    ReplyDelete
  2. செய்ந்நன்றி என்றால் செய்த உதவி என்று பொருள் அன்பரே.

    ReplyDelete

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.